ரூ.20 லட்சத்தில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறப்பு


ரூ.20 லட்சத்தில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறப்பு
x

முத்துப்பேட்டையில் ரூ.20 லட்சத்தில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறக்கப்பட்டன.

திருவாரூர்

முத்துப்பேட்டையில் ரூ.20 லட்சத்தில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறக்கப்பட்டன.

தட்டுப்பாடு

முத்துப்பேட்டையில் பொதுமக்களுக்கு தினந்தோறும் வழங்கப்படும் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட குடிநீர் போதுமானதாக இருந்தாலும் வறட்சியான நேரத்தில் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனால் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் தட்டுப்பாடு இருக்கும் இடத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி தெற்குக்காடு கோசாகுளம், செம்படவன்காடு, மருதங்காவெளி ஆகிய 3 இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

இந்தநிலையில் தெற்குக்காடு மாரியம்மன் கோவில் தெரு மற்றும் பேட்டை அங்காளம்மன் கோவில் தெரு பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதையடுத்து அப்பகுதியில் 15-வது நிதிக்குழு மான்யம் 2021- 2022 திட்டத்தின் படி ரூ.20 லட்சம் செலவில் 2 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டன.

குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்

இந்த 2 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு பேரூராட்சி செயல் அலுவலர் நாராயணமூர்த்தி தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் மும்தாஜ் நவாஸ்கான், 2 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களையும் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் துணைத்தலைவர் ஆறுமுக சிவக்குமார், பேரூராட்சி அலுவலர்கள் கார்த்தி, மதன்குமார், பேரூராட்சி கவுன்சிலர்கள் அய்யப்பன், தமிழழகன், தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் தீன்முகமது, அரசு ஒப்பந்தக்காரர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story