எங்கு பார்த்தாலும் குடிநீர் குழாய் உடைப்பு...எப்பதான் சரி செய்வீங்க...


எங்கு பார்த்தாலும் குடிநீர் குழாய் உடைப்பு...எப்பதான் சரி செய்வீங்க...
x

எங்கு பார்த்தாலும் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் எப்போதுதான் சரி செய்வீங்க என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

திருப்பூர்

நீரின்றி அமையாது உலகு, தண்ணீரின் மகத்துவத்தை உணர்த்தும் தெய்வப் புலவர் வள்ளுவரின் காலத்தால் அழியாத உயிர்ப்புள்ள வரிகள். ஓரறிவு படைத்த தாவரங்கள் உள்பட அனைத்து உயிரினங்களின் ஆதாரமாக உள்ள தண்ணீரை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொடுக்க வேண்டிய நமது கடமையை இரண்டு வரிகள் உணர்த்துகிறது.

குடிநீர் குழாய் உடைப்புகள்

பருவமழை பொய்த்து விட்ட தற்போதைய சூழலில் தண்ணீரை பாதுகாத்து வழங்க வேண்டிய அதிகாரிகள் கடமை தவறிய காரணத்தினால் தண்ணீர் பற்றாக்குறை தலை விரித்து ஆடுகிறது. முறையற்ற தண்ணீர்வினியோகம், உடைப்பை சீரமைப்பதில் அலட்சியம், திட்டங்களை செயல்படுத்துவதில் காலதாமதம் உள்ளிட்ட பல்வேறுநிர்வாக குளறுபடிகளால் பொதுமக்கள் போராடி தண்ணீரை பெற வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

அதை உணர்த்துவது தான் உடுமலை பகுதியில் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள குடிநீர் குழாய் உடைப்புகள். அதை சீரமைப்பதில் காட்டப்படும் அலட்சியத்தால் ஏராளமான தண்ணீர் வீணாகி சாலையோரங்களிலும், விளை நிலங்களில் தேங்கியும், கழிவு நீர் கால்வாயில் கலந்தும் வருகிறது. பயனுள்ள திட்டம் இருந்தும் பயனற்ற நிர்வாகத்தால் குடிநீர் வீணாகி வருவது பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. 9 குடம் தண்ணீரை பெற ஒருவாரம் குழாய் மேல் விழிவைத்து காத்திருந்து துளி தண்ணீரை கூட அமிர்தமென பாதுகாத்து பயன்படுத்தும் கிராமப்புற பொதுமக்களின் பரிதவிப்பை அதிகாரிகள் உணரும் நிலையில் இல்லை.

வீணாகும் குடிநீர்

யாரோ செய்யும் தவறுக்கு யாரோ பொறுப்பு ஏற்பது என்று அதிகாரிகள் செய்த தவறுக்கு அரசாங்கம் அவப்பெயரை சுமக்க வேண்டிய நிலை தான் உடுமலையில் நிலவுகிறது. ஜல்லிபட்டி அருகே இரண்டு பகுதியிலும் வாளாவாடி- தளி சாலையில் நான்கு பகுதியிலும் குடிநீர் குழாய் உடைந்து மாதக்கணக்கில் தண்ணீர் வெளியேறி வருகிறது. அது இன்று வரையிலும் சீரமைக்காத காரணத்தினால் குடிநீருடன் கழிவுநீர் கலந்து சென்று பொது மக்களுக்கு உடல் உபாதைகளையும் ஏற்படுத்தி வருகிறது.

இதனால் தண்ணீர் சுத்திகரிப்பு செய்யும் நடைமுறையும் வீணாகி உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் நேரடியாக கள ஆய்வு செய்து குடிநீர் குழாய் உடைப்புகளில் அலட்சியம் காட்டும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அடிப்படை தேவையான தண்ணீரை அனைவருக்கும் சரிசமமாக வினியோகம் செய்வதற்கும் முன்வர வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Related Tags :
Next Story