வாய்மேட்டில் குழாயில் உடைப்பு; வீணாகும் குடிநீர்


வாய்மேட்டில்   குழாயில் உடைப்பு; வீணாகும் குடிநீர்
x

வாய்மேட்டில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது.

நாகப்பட்டினம்

வாய்மேட்டில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது.

கூட்டு குடிநீர் திட்ட குழாய்

நாகை மாவட்டம் வாய்மேடு அருகே வண்டுவாஞ்சேரியில் இருந்து அண்ணாப்பேட்டை, வாய்மேடு, தகட்டூர், மருதூர், ஆயக்காரன்புலம் வழியாக வேதாரண்யம் வரை கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட பிரதான குழாய் பதிக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வாய்மேடு கடைத்தெரு வழியாக செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. அதில் இருந்து குடிநீர் வெளியேறி வீணாக ஆற்றில் கலக்கிறது. இந்த பகுதியில் உள்ள கிராமப்புறங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில் குழாய் உடைப்பால் குடிநீர் வீணாகி வருவது பொதுமக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

சரி செய்ய கோரிக்கை

வாய்மேடு கடைத்தெருவில் ஏராளமான வர்த்தக நிறுவனங்கள், கடைகள் இயங்கி வருகின்றன. வங்கி மற்றும் பள்ளிகள் உள்ளன. இதனால் எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இநத நிலையில் உடைந்த குழாயில் இருந்து தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்படுவதால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் கூறுகிறார்கள்.

கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்து, குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story