தேவேரியம்பாக்கம் ஊராட்சியில் சூரிய மின்சக்தி மோட்டார் மூலம் மரக்கன்றுகளுக்கு தண்ணீர்
தேவேரியம்பாக்கம் ஊராட்சியில் சூரிய மின்சக்தி மோட்டார் மூலம் மரக்கன்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட தேவேரியம்பாக்கம் ஊராட்சியில் காலியாக உள்ள பொது இடங்களிலும் தரிசு நிலங்களிலும் குறுங்காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினம் முதல், ஊராட்சி மன்ற தலைவர் அஜய்குமார் ஏற்பாட்டின் பேரில் மரங்கள் நடும் பணி தொடங்கப்பட்டு கிராம மக்கள் ஆதரவுடன் 12 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. கிராமப்புற தரிசு நிலங்களில் நடவு செய்யப்பட்டுள்ள நாட்டு மரக்கன்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்ச கைவிடப்பட்ட கல்குவாரி குட்டைகளில் தேங்கியுள்ள நீர் ஆதாரத்தை பயன்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் சூரிய மின்சக்தி மோட்டார் அமைக்கப்பட்டு மரக்கன்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் அஜய்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தனியார் தொண்டு நிறுவன மேலாளர் வஜ்ஜிரவேலு, மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் என்ஜினீயர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு மின்மோட்டாரை இயக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கோவிந்தராஜன், வார்டு உறுப்பினர்கள் சாந்தி, பூபதி, ஞானவேல் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.