மதுக்கடைகளில் விற்பனை அதிகம் என்பது எங்களுக்கு மகிழ்ச்சி இல்லை- அமைச்சர் சு.முத்துசாமி பேட்டி
மதுக்கடைகளில் அதிக விற்பனை என்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி இல்லை என்று அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.
மதுக்கடைகளில் அதிக விற்பனை என்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி இல்லை என்று அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.
தவறான பிரசாரங்கள்
ஈரோட்டில் நேற்று பல்வேறு அரசு திட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அமைச்சர் சு.முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் மதுக்கடைகளில் அங்கொன்று இங்கொன்றாக அதாவது 2 அல்லது 5 சதவீதம் அளவில் ஏதேனும் தவறுகள் நடந்தால் அதை, ஒட்டுமொத்தமாக நடப்பதாக தவறான பிரசாரங்கள் செய்யப்பட்டு வந்தன. சிறு தவறு என்றாலும் அது நடைபெற அனுமதிக்கக்கூடாது. தவறு நடக்க காரணங்கள் என்ன என்பதை ஆய்வு செய்து வருகிறோம். இதற்காக கடைகளுக்கே நேரடியாக சென்று ஆய்வு செய்கிறோம்.
மதுக்கடையாக இருந்தாலும், அரசின் மூலம் நடத்தப்படும் ஒரு நிறுவனம் அது. அதில் தவறுகள் நடைபெற வாய்ப்புகள் அளிக்கக்கூடாது. கடை பணியாளர் மட்டுமின்றி, மக்களுக்கும் பாதுகாப்பை அளிக்க வேண்டும். இதற்காக தொடர்ந்து பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதற்கிடையே தொடர்ந்து பல தவறான பிரசாரங்கள் செய்யப்படுகின்றன. தவறுகள் நடப்பது கண்டறியப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
விற்பனை நேரம்
தற்போது தமிழ்நாட்டில் பல கட்ட ஆய்வுகளுக்கு பின்னர் 500 கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன. இதில் சில கடைகளை அடைத்திருக்க வேண்டாம் என்றும், பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் கடைகளை அடைக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வந்திருக்கின்றன. இதுபற்றிய ஆய்வும் நடந்து வருகிறது. ஆனால் மூடப்பட்ட கடைகளின் எண்ணிக்கை 500 என்பதில் இருந்து குறைக்கப்படாது.
இதுபோல் மதுக்கடைகளின் விற்பனை நேரம் தொடர்பாக ஆலோசனை நடந்து வருகிறது. இதுதொடர்பாக கோர்ட்டுகளில் பல்வேறு வழக்குகள் உள்ளன. மதுக்கடை திறக்கும் நேரத்தை குறைப்பதில் பிரச்சினை இல்லை. ஆனால் கடைகள் அடைக்கப்படும் நேரத்தில் மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள் வேறு வழியிலான போதைகளுக்கு சென்றுவிடக்கூடாது என்ற எச்சரிக்கை அதிகம் தேவை உள்ளது.
மகிழ்ச்சி இல்லை
கடைகளை அடைப்பதால் மது குடிக்காமல் மதுப்பிரியர்கள் திருந்தி விட்டால் மகிழ்ச்சி. ஆனால் அவர்களின் போதை தேடல் இன்னும் ஆபத்தானதாக மாறிவிடக்கூடாது. மதுக்கடையில் அதிக விற்பனை என்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி இல்லை. மதுக்கடைகளில் விற்பனை குறைய வேண்டும் என்றே விரும்புகிறோம்.
தற்போது நாங்கள் தேர்தலைப்பற்றி சிந்திக்கவில்லை. மக்களின் பிரச்சினை குறித்தும், அதற்கு எப்படி தீர்வு காண்பது என்றும்தான் கவனம் செலுத்துகிறோம். எனவே தேர்தல் பற்றியோ, ஓட்டுகள் பற்றியோ இப்போது எங்களால் சிந்திக்க முடியாது.
இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.
பேட்டியின் போது ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. ஆகியோர் உடன் இருந்தனர்.