'பெப்பர் ஸ்பிரே' அடித்து விட்டு தப்பி ஓடிய 'ரவுடி ஆனந்தனை ஓட ஓட விரட்டி தலையை துண்டித்து கொன்றோம்'-கோர்ட்டில் சரண் அடைந்தவர்கள் பரபரப்பு வாக்குமூலம்
‘பெப்பர் ஸ்பிரே’ அடித்து விட்டு தப்பி ஓடிய ரவுடி ஆனந்தனை ஓட ஓட விரட்டி தலையை துண்டித்து கொன்றோம் என்று இந்த கொலை வழக்கு தொடர்பாக சரண் அடைந்தவர்கள் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
அயோத்தியாப்பட்டணம்:
ரவுடி கொலை
சேலம் அருகே குள்ளம்பட்டி காட்டூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 45). பிரபல ரவுடியான இவரை கடந்த 5-ந் தேதி நள்ளிரவு மர்ம கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்தது. பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை குறித்து காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் கொலையாளிகளை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு ஹரிசங்கரி தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் காட்டூர் ஆனந்தன் கொலை வழக்கு தொடர்பாக, வலசையூரை சேர்ந்த ரவுடி அன்பழகன், கன்னங்குறிச்சியை சேர்ந்த மணிகண்டன், பள்ளி பட்டியை சேர்ந்த அஜித் குமார், வெள்ளியம்பட்டியை சேர்ந்த சக்திவேல் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் சரண் அடைந்தனர்.
மேலும் இந்த கொலை தொடர்பாக, வலசையூரை சேர்ந்த சீனிவாசன், வெள்ளியம்பட்டியை சேர்ந்த ராஜா, ஹரி சிவன், இவருடைய தம்பி குழந்தைவேல் ஆகியோரை காரிப்பட்டி போலீசார் கைது செய்தனர். சரண் அடைந்த மற்றும் போலீசாரால் கைது செய்யப்பட்டவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
பரபரப்பு வாக்குமூலம்
இந்த நிலையில் சென்னையில் சரண் அடைந்த அன்பழகன், சக்திவேல், மணிகண்டன், அஜித் குமார் ஆகிய 4 பேரையும் காரிப்பட்டி இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ் தலைமையில் போலீசார் 4 நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். அதில் 4 பேரும் கொலைக்கான காரணம் குறித்து போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது:-
வலசையூரில் உள்ள ஒரு பேக்கரியில் அன்பழகன் பங்குதாரராக இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் பேக்கரியில் இருந்து விலகிக்கொண்ட அவர், பேக்கரிக்கு அடிக்கடி வந்து பணம் கேட்டு மிரட்டி உள்ளார். இதனை ரவுடி காட்டூர் ஆனந்தன் கண்டித்துள்ளார். இதனால் ரவுடி ஆனந்தனை தீர்த்து கட்ட அன்பழகன் முடிவு செய்து உள்ளார்.
அதேபோல் சக்திவேல் தனது நண்பர்களுடன் வலசையூர் பகுதியில் ேமாட்டார் சைக்கிளில் சுற்றிஉள்ளார். அப்போது காட்டூர் ஆனந்தன் அவர்களை வழிமறித்து இந்த பக்கம் வந்தால் கொன்று விடுவதாக மிரட்டி உள்ளார். அதனால் ரவுடி அன்பழகனுடன் சேர்ந்து ரவுடி ஆனந்தனை வெட்டி கொலை செய்ய அவர்கள் திட்டமிட்டு உள்ளனர்.
'பெப்பர் ஸ்பிரே'
அதன்படி சம்பவத்தன்று இரவு வலசையூரில் இருந்து காட்டூருக்கு ரவுடி ஆனந்தன், தனது நண்பர் பிரபாகரனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். இதையறிந்த ரவுடி அன்பழகன்,, சக்திவேல் தரப்பை சேர்ந்த 8 பேர் கொண்ட கும்பல் காட்டூர் சுடுகாடு அருகே பதுங்கி இருந்துள்ளது.
அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த ரவுடி ஆனந்தனை வழிமறித்து அந்த கும்பலை சேர்ந்தவர்கள் கத்தியால் வெட்டினர். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடன் வந்த நண்பர் பிரபாகரன் அங்கிருந்து தப்பி ஓடினார். அதே நேரத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்த ஆனந்தன், தான் கையில் வைத்திருந்த பெப்பர் ஸ்பிரேவை அந்த கும்பல் மீது அடித்து விட்டு தப்பி ஓட முயன்றார். அவரை அந்த கும்பலை சேர்ந்தவர்கள் ஓட, ஓட விரட்டிச்சென்று தலையை துண்டாக வெட்டினர். இதில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே ஆனந்தன் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவர் இறந்து விட்டதை அந்த கும்பல் உறுதி செய்து விட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டதாக போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் அவர்கள் கூறி உள்ளனர்.
கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீஸ் விசாரணை இன்று (திங்கட்கிழமை) மாலையுடன் முடிகிறது. அதன்பிறகு அவர்கள் அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தபட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.