866 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தி ஆன்மிக புரட்சியை ஏற்படுத்தி உள்ளோம் - அமைச்சர் சேகர்பாபு பேட்டி


866 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தி ஆன்மிக புரட்சியை ஏற்படுத்தி உள்ளோம் - அமைச்சர் சேகர்பாபு பேட்டி
x
தினத்தந்தி 26 July 2023 5:05 AM GMT (Updated: 26 July 2023 6:33 AM GMT)

866 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தி ஆன்மிக புரட்சியை ஏற்படுத்தி உள்ளோம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார்.

காஞ்சிபுரம்

ஸ்ரீபெரும்புதூர்,

தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி (ராமானுஜர்) கோவில் மற்றும் ராமானுஜர் மணிமண்டபத்தினை ஆய்வு செய்து, மணிமண்டபத்தினை விரைவில் பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினர்.

சமூக நீதியின் காவலர் ராமானுஜர் என்பதால் தான் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ராமானுஜர் பற்றி தொடர் எழுதி அதனை வாரந்தோறும் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்தார். அவர் வழியில் செயல்படும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட கோவில்களை புனரமைக்க 2022-23-ம் ஆண்டு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்தார். இதனால் 46 பழமையான கோவில்களிலும், உபயதாரர் நிதியின் மூலம் 66 கோவில்களிலும் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதேபோல் இந்த ஆண்டும் ரூ.100 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளார். அதில் 64 கோவில்கள் திருப்பணிக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கின்றன. அந்தப் பணிகளில் ஸ்ரீபெரும்புதூர், ராமானுஜர் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலுக்கு 2008-ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. ஆகவே மீண்டும் குடமுழுக்கு நடத்திட மாநில வல்லுனர் குழுவில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் பணிகள் தொடங்கப்படும்.

இந்த இடத்தில் அர்ச்சகர் பயிற்சி பள்ளி தொடங்கிட ஏற்கனவே 2 முறை விளம்பரம் தந்தோம். இதுவரை யாரும் விண்ணப்பிக்கவில்லை. தொடர்ந்து அர்ச்சகர் பயிற்சி பள்ளியை அமைப்பதற்கான முயற்சியை துறை மேற்கொள்ளும். ராமானுஜர் மணி மண்டபத்தில் அவரது வரலாற்றை சித்தரிக்கின்ற வகையில் புகைப்பட கண்காட்சியுடன், ஒலி ஒளி காட்சியோடு ஏற்பாடு செய்வதற்கு கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அது தொடர்பாக தனியார் ஆலோசகர் மூலம் வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இன்னும் 15 நாட்களுக்குள் வரைபடங்கள் மற்றும் துறை அலுவலர்களுடன் இங்கு வருகை தந்து ஆய்வு செய்ய இருக்கிறோம்.

திருவண்ணாமலை கோவிலில் பவுர்ணமியன்று 2 தினங்களுக்கு கட்டண தரிசனத்தை ரத்து செய்து, பொது தரிசனத்தை அறிவித்திருக்கிறோம். அது பக்தர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.

இந்த கோவிலில் முக்கிய பிரமுகர்கள் தரிசனத்திற்கு வருகின்றபோது கோவிலின் வருமானத்தை கணக்கில் கொண்டு சிறப்பு தரிசனத்திற்கு செல்பவரிடம் ரூ.500 கட்டணம் வசூலித்து இருக்கிறார்கள். தற்சமயம் அதனையும் நிறுத்தியுள்ளோம். இதுபோன்ற நிகழ்வில் முதல்-அமைச்சரின் உத்தரவினால் விரைவில் நிரந்தர தீர்வு காணப்படும்.

400 ஆண்டுகள் குடமுழுக்கு நடைபெறாமல் இருந்த திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவில், 100 ஆண்டுகளுக்கு மேல் குடமுழுக்கு நடைபெறாமல் இருந்த 16 கோவில்களில் குடமுழுக்கை நடத்திக் காட்டிய ஆட்சி முதல்-அமைச்சரின் ஆட்சியாகும். இதுவரை 866 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தி ஒரு ஆன்மிக புரட்சியை ஏற்படுத்தி உள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை, காஞ்சீபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேசன், இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் வான்மதி, உதவி ஆணையர் லட்சுமிகாந்த் பாரதிதாசன், ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் சரவண கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story