அதிமுக தொண்டர்களை நம்பி தர்ம யுத்தத்தை தொடங்கி உள்ளோம் - திருச்சி மாநாட்டில் ஓ.பி.எஸ். பேச்சு


அதிமுக தொண்டர்களை நம்பி தர்ம யுத்தத்தை தொடங்கி உள்ளோம் - திருச்சி மாநாட்டில் ஓ.பி.எஸ். பேச்சு
x

"தொண்டர்களில் ஒருவனை முதல்-அமைச்சராக ஆக்கும் கடமை எனக்கு உள்ளது என திருச்சி மாநாட்டில் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

திருச்சி,

ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி - ஓ பன்னீர்செல்வம் ஆகியோரிடையே மோதல் வெடித்து ஓராண்டை அடைய உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக பல்வேறு தடைகளுக்கு மத்தியில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தி எடப்பாடி பழனிசாமி அதில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

அதன் தொடர்ச்சியாக அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி. மறுபக்கம் அதிமுகவை கைப்பற்றும் வகையில் ஓ.பன்னீர்செல்வமும் பல்வேறு சட்டப்போராட்டங்களை தனது ஆதரவாளர்கள் துணையுடன் நடத்தி வருகிறார். இதற்கு மத்தியில் எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரித்து ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களை சில நாட்களுக்கு முன் ஏற்றது இந்திய தலைமை தேர்தல் ஆணையம்.

இந்த நிலையில் இன்று ஓபிஎஸ் தரப்பு திருச்சியில் முப்பெரும் விழா கூட்டம் கூடியது. இதில் ஏராளமான ஆதரவாளர்கள் பெரும் திரளாக கலந்துகொண்டார்கள். இந்த கூட்டத்தில் அதிமுக பொதுக்குழு, ஓபிஎஸ் நீக்கம், உள்ளிட்ட 5 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

* போலி பொதுக்குழு மூலம் ஓபிஎஸ் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உல்லை என எடுக்கப்பட்ட முடிவை நிராகரிக்கிறோம்.

* இபிஎஸ் இடம் உள்ள பொதுக்குழு கலைக்கப்பட வேண்டும்.

* நேர்மையான பொதுக்குழுவை உருவாக்க வேண்டும்.

* ஜெயலலிதா மட்டுமே நிரந்த பொதுச்செயலாளர்.

* பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட இபிஎஸ், மற்ற பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ல இன்னும் சிலர் அந்தந்த பொறுப்புகளில் இருந்து விலக வேண்டும்.

அதனை தொடர்ந்து திருச்சி ஜி கார்னரில் நடைபெறும் முப்பெரும் விழா மாநாட்டில் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது:-

அண்ணா பெயரால் இருக்கும் அதிமுக வரலாற்று சிறப்புமிக்க இயக்கம். அதிமுக-வின் ஆணிவேர் தொண்டர்கள் தான்;

நிரந்தர பொதுச்செயலாளர் என்ற அந்தஸ்தை ரத்து செய்த நயவஞ்சகர்களை நாம் ஓட ஓட விரட்டும் காலம் வெகுதூரத்தில் இல்லை. எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் சகோதர பாசத்துடன் அதிமுகவை வளர்த்தனர். 2 முறை முதல்-அமைச்சர் பதவியை எனக்கு அம்மா கொடுத்தார். 3-வது முறையாக சின்னம்மா கொடுத்தார். தொண்டர்களில் ஒருவனை முதலமைச்சர் ஆக்கும் கடமை எனக்கு உள்ளது.

ஜெயலலிதா எனக்கு தந்த பதவியை நான் திருப்பி தந்து விட்டேன். இபிஎஸ்க்கு யார் பதவியை தந்தது? அதிமுக பொதுக்குழுவில் நிகழ்ச்சி நிரல்படி எதுவும் நடக்கவில்லை. அதிமுக தொண்டர்களை நம்பிதான் நாங்கள் தர்ம யுத்தத்தை தொடங்கி உள்ளோம். ஜனநாயகமுறையில் அதிமுக தொடர்ந்து இயங்க வேண்டும். தொண்டர்களுக்காக எந்த தியாகமும் செய்ய தயார். போலி பொதுக்குழு நடத்தி தண்ணீர் பாட்டில் வீசியவர்களுக்கு தக்கப்பாடம் புகட்ட வேண்டும் என்றார்.


Next Story