சந்திரனுக்கு ராக்கெட் விடுகிறோம்.. ஆனால் எண்ணெய் கழிவை அகற்ற கருவி இல்லையா..? - கமல்ஹாசன் கேள்வி


சந்திரனுக்கு ராக்கெட் விடுகிறோம்.. ஆனால் எண்ணெய் கழிவை அகற்ற கருவி இல்லையா..?  - கமல்ஹாசன் கேள்வி
x

எண்ணூர் பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், பைபர் படகு மூலம் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை,

புயல் காரணமாக பெய்த பலத்த மழையின்போது தொழிற்சாலையில் இருந்து கச்சா எண்ணெய் கழிவு மழைநீருடன் கலந்து பக்கிங்காம் கால்வாய் வழியாகத் தாழ்வான பகுதிகளில் படிந்துள்ளது. இந்த கழிவுகள் கொசஸ்தலை ஆற்று நீரில் கலந்து, எண்ணூர் கடலிலும் கலந்ததால் 20 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு கடலில் கச்சா எண்ணெய் கழிவு படிந்துள்ளது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து பசுமை தீர்ப்பாயம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. கடலோர காவல் படையினர் எண்ணெய் கழிவுகளை அழிப்பதற்காக ரசாயன பொடிகளை கடலில் தூவி உள்ளனர். மத்திய, மாநில அரசுகளின் சார்பில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு எண்ணெய் கழிவுகளை அகற்றுவது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், எண்ணூர் காட்டுக்குப்பம் பகுதியில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், பைபர் படகு மூலம் சென்று ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, அப்பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட மீனவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சந்திரனுக்கு ராக்கெட் விடுகிறோம்.. ஆனால் எண்ணெய் கழிவை அகற்ற கருவி இல்லையா..? என்று கேள்வி எழுப்பினார்.

அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'மீனவர்களின் கையில் பாத்ரூம் பக்கெட்டுகளை கொடுத்து எண்ணெய் கழிவை அகற்றுங்கள் என்று கூறுவது மனிதாபிமானம் அற்ற செயல். கேவலமாக இருக்கிறது, சந்திரனுக்கு ராக்கெட் விட்டு ஆய்வு செய்யும் உங்களால் எண்ணெய் கழிவை அகற்ற கருவி வாங்க முடியவில்லையா..?' என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் அவர், 'எண்ணெய் கழிவுகளை அகற்ற கருவிகள் வாங்கப்பட வேண்டும். அந்த கருவி வாங்க ஏற்படும் செலவில் பெரும் பகுதியை இந்த தொழிற்சாலை நிர்வாகம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுபோன்ற உயிர்கொல்லி வேலைகளை செய்பவர்களுக்கு கடும் தண்டனையை அரசு வழங்க வேண்டும்' என்று கூறினார்.


Next Story