அரசு திட்டங்கள் அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்


அரசு திட்டங்கள் அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 23 Nov 2022 7:30 PM GMT (Updated: 23 Nov 2022 7:30 PM GMT)

அரசின் திட்டங்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு கிடைப்பதை அரசு அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று அரசின் முதன்மைச் செயலாளர் அதுல் ஆனந்த் உத்தரவிட்டார்.

தர்மபுரி

அரசின் திட்டங்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு கிடைப்பதை அரசு அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று அரசின் முதன்மைச் செயலாளர் அதுல் ஆனந்த் உத்தரவிட்டார்.

ஆய்வு கூட்டம்

தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தமிழக அரசின் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்த அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அரசின் முதன்மை செயலாளரும், தொழிலாளர் நல ஆணையாளருமான அதுல் ஆனந்த் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் சாந்தி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அந்தந்த துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்ட பணிகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் எடுத்துக் கூறினர்.

இதைத்தொடர்ந்து அரசு முதன்மைச் செயலாளர் அதுல் ஆனந்த் பேசியதாவது:-

தமிழ்நாடு அரசு அறிவித்து செயல்படுத்தி வருகின்ற அனைத்து திட்டங்களையும் கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் பணியினை அரசுத்துறை அலுவலர்கள் முனைப்புடன் மேற்கொள்ள வேண்டும். அனைத்து அரசு திட்டங்களும் சம்பந்தப்பட்ட தகுதியான பயனாளிகளுக்கு கிடைப்பதை அரசு அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.

கண்காணிக்க வேண்டும்

தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை அந்தந்த துறை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அரசின் மூலம் அளிக்கப்பட்டவரும் சேவைகளை உடனுக்குடன் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இ-சேவை மையங்களில் வழங்கப்படுகின்ற அனைத்து சேவைகளும் தாமதமின்றி மக்களுக்கு உடனுக்குடன் கிடைத்திட துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். தர்மபுரி மாவட்டம் விவசாயம் சார்ந்த மாவட்டமாகும். வேளாண் வளர்ச்சிக்கும், விவசாயிகளின் உயர்வுக்கும் முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டங்கள் அனைத்தும் விவசாயிகளை முழுமையாக சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, உதவி கலெக்டர் ஜெயக்குமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் மரியம் ரெஜினா, ஊராட்சிகள் உதவி இயக்குனர் மாலா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சாந்தி, வேளாண் இணை இயக்குனர் விஜயா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் மாலினி, மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் சாந்தி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சவுண்டம்மாள் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story