இனி வரும் காலங்களில் பட்டாசு ஆலை விபத்துளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ்


இனி வரும் காலங்களில் பட்டாசு ஆலை விபத்துளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ்
x
தினத்தந்தி 23 Jun 2022 11:39 AM GMT (Updated: 23 Jun 2022 12:05 PM GMT)

கடலூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

கடலூர் எம்.புதூர் பகுதியில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் இன்று பிற்பகலில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் அங்கு பணியாற்றி வந்த மூவர் உயிரிழந்தனர்; இருவர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகின்றனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த சில ஆண்டுகளாகவே பட்டாசு ஆலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன. பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு விதிகள் முழுமையாக கடைபிடிக்கப்படாதது தான் அதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இப்போது விபத்துக்குள்ளாகியுள்ள பட்டாசு ஆலைக்கான உரிமம் கடந்த ஆண்டே முடிவடைந்து விட்டதாகவும், அதை புதுப்பிப்பதற்கான மனு தாக்கல் செய்யப்பட்டும் கூட பாதுகாப்பு தணிக்கை உள்ளிட்ட நடைமுறைகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் தெரிகிறது.

ஏற்கனவே கடந்த 2020ம் ஆண்டில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தொகுதிக்குட்பட்ட குருங்குடி என்ற இடத்தில் நடந்த பட்டாசு ஆலை விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். அதற்குப் பிறகும் கூட இத்தகைய விபத்துகள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகம் தவறிவிட்டது. இனி வரும் காலங்களிலாவது இத்தகைய பட்டாசு ஆலை விபத்துகள் நிகழாமல் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகமும், சம்பந்தப்பட்ட துறைகளும் செய்ய வேண்டும்.

பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த மூவரின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வீதம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். காயமடைந்த இருவருக்கு தரமான மருத்துவம் அளிப்பதுடன், அவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் இழப்பீடு வழங்குவதற்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story