கள்ளச்சாராய இறப்புகளை அரசின் தோல்வியாக பார்க்கிறோம் - டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேட்டி


கள்ளச்சாராய இறப்புகளை அரசின் தோல்வியாக பார்க்கிறோம் - டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேட்டி
x

கள்ளச்சாராய இறப்புகளை அரசின் தோல்வியாக பார்க்கிறோம் என்று பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் சாராயம் குடித்ததில் உடல்நலம் பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேற்று மாலை பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மரக்காணம், செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரையில் 17 பேர் இறந்துள்ளனர். 50 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அரசு, கள்ளச்சாராயத்தை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

போலீசாருக்கு தெரியாமல் ஒரு சொட்டுகூட சாராயம் விற்க முடியாது. அதுபோல் கிராம நிர்வாக அலுவலருக்கு தெரியாமலும், அரசியல் கட்சியினரின் ஆதரவு இல்லாமலும் சாராயம் விற்க முடியாது.

ஆனால் அங்கு பல ஆண்டுகளாக சாராயம் விற்பனை நடந்து கொண்டிருக்கிறது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் 2 நாட்கள் காலதாமதம் ஏற்பட்டது. உடனே உயர் சிகிச்சை அளித்திருந்தால் இன்னும் சாவுகளை தடுத்திருக்கலாம். இதற்கு முழு பொறுப்பு தமிழக அரசு. இதை அரசின் தோல்வியாகவே பார்க்கிறோம்.

ஒருபுறம் கள்ளச்சாராயம், மற்றொரு புறம் அரசு சாராயம். இந்த இரண்டுக்கும் வித்தியாசம் கிடையாது. கள்ளச்சாராயத்தால் இந்த 2 நாட்களில் 17 பேர் இறந்து விட்டதாக பரபரப்பாக பேசப்படுகிறது. ஆனால் அரசு விற்கிற டாஸ்மாக் சாராயத்தால் கடந்த ஓராண்டில் 5 லட்சம் பேர் இறந்திருக்கிறார்கள். இதைப்பற்றி நாம் பேசுவது கிடையாது.

மேலும், டாஸ்மாக் மதுபானங்களின் விலையை மூன்று மடங்கு உயர்த்தி விட்டனர். இதனால் அதை வாங்குவதற்கு கட்டுப்படியாகாததால் இதுபோன்று கள்ளச்சாராயம் குடிப்பதற்கு மாறியுள்ளனர்.

2 போலீஸ் சூப்பிரண்டுகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். இது போதுமானது கிடையாது. மதுவிலக்கு துறை அமைச்சரை மாற்ற வேண்டும், சமூக அக்கறை இல்லாத அமைச்சர் மதுவை திணித்து இந்த தலைமுறையை நாசமாக்கி விட்டார்.

தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் மட்டுமின்றி அரசு விற்கிற சாராயமும் அகற்றப்பட வேண்டும். படிப்படியாக பூரண மதுவிலக்கை கொண்டுவர என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள் என்பதை முதல்-அமைச்சர் தெளிவுப்படுத்த வேண்டும்.

இல்லையெனில் மதுவுக்கு எதிராக பெரும் கோபத்தில் இருக்கும் பெண்களை திரட்டி விரைவில் மிகப்பெரிய போராட்டத்தை பா.ம.க. நடத்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story