சினிமாவை அரசியலாக பார்ப்பதை தவிர்க்க வேண்டும் பவானியில் அண்ணாமலை பேட்டி


சினிமாவை அரசியலாக பார்ப்பதை தவிர்க்க வேண்டும் பவானியில் அண்ணாமலை பேட்டி
x
தினத்தந்தி 18 Oct 2023 3:06 AM IST (Updated: 18 Oct 2023 3:07 AM IST)
t-max-icont-min-icon

சினிமாவை அரசியலாக பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என்று பவானியில் அண்ணாமலை தொிவித்தாா்.

ஈரோடு

சினிமாவை அரசியலாக பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என்று பவானியில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

தமிழ்நாடு பா.ஜனதா வசமாகும்

பவானியில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலையின் 'என் மண், என் மக்கள்' நடைபயணம் நடைபெற்றது. அதன்பின்னர் மதியம் அவர் பா.ஜனதா பிரமுகர் வீட்டில் தங்கியிருந்தபோது திரிபுரா மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரியும், மாநில பா.ஜனதா ஒருங்கிணைப்பாளருமான பிப்லப் குமாரும், ஆந்திர மாநிலத்தின் முன்னாள் எம்.எல்.சி. பூங்கோட்டி சுதாகர் ரெட்டி ஆகியோரும் அண்ணாமலையை சந்தித்து பேசினர். அதன்பின்னர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 25 ஆண்டுகளாக திரிபுரா மாநிலம் கம்யூனிஸ்டுகள் வசமாக இருந்தது. கடந்த முறை அது பா.ஜனதா வசமானது. இதேபோல் தமிழ்நாடும் திராவிட கட்சிகளின் கைகளில் இருந்து பா.ஜனதா வசமாகும்.

தவிர்க்க வேண்டும்

தமிழகத்தில் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை குடோன்களில் நடக்கும் வெடி விபத்தால் ஆண்டுதோறும் விலை மதிப்பே இல்லாத உயிர்கள் பலியாகி வருவது வேதனைக்குரியது. நீதி அரசர்கள் இதில் தலையிட்டு பட்டாசு தயாரிக்கும் தொழிலை குறுகிய காலத்திற்கு மட்டும் அனுமதிக்காமல் நீண்ட காலம் தயாரிக்க அனுமதித்தால் பெரும்பான்மையான விபத்துகளை தடுக்கலாம்.

தமிழகத்தில் சில நடிகர்களின் திரைப்படங்களை திரையிடக்கூடாது என சில காரணங்களை சொல்லி அரசு நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ செயல்படக்கூடாது. சினிமாவை சினிமாவாகத்தான் பார்க்க வேண்டும். அரசியலாக பார்க்கப்படுவதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அந்தியூரில்

இதைத்தொடர்ந்து நேற்று இரவு அந்தியூரில் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடை பயணம் நடைபெற்றது. அப்போது அந்தியூர் ரவுண்டானாவில் கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் அவர் பேசினார். அவர் பேசும்போது, 'இந்தியாவிலேயே அதிகமாக கடன் வாங்கிய மாநிலமாக தமிழகம் இருக்கிறது. ரூ.7.53 லட்சம் கோடி கடன் இருக்கிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்பு ரூ.2 லட்சம் கோடி கடன் வாங்கியிருக்கிறது. இதே நிலை தொடர்ந்தால், இன்னும் 2 ஆண்டுகளில் போலீசாருக்கு மாத சம்பளம் கொடுக்க தமிழக அரசிடம் பணம் இருக்காது. ஒரு பக்கம் கடன்கார மாநிலமாகவும், இன்னொரு பக்கம் குடிகார மாநிலமாகவும் மாற்றி வைத்துள்ளனர். எனவே வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்பவேண்டிய நேரம் வந்துவிட்டது' என்றார். முன்னதாக ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் கலைவாணி விஜயகுமார் அண்ணாமலையை வரவேற்றாார்.


Next Story