வரும் 31-ம் தேதி கோட்டையை முற்றுகையிடுவோம் - அண்ணாமலை பேட்டி


வரும் 31-ம் தேதி கோட்டையை முற்றுகையிடுவோம் - அண்ணாமலை பேட்டி
x
தினத்தந்தி 25 May 2022 4:52 PM GMT (Updated: 25 May 2022 4:52 PM GMT)

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க தமிழக அரசுக்கு விடுக்கப்பட்டிருந்த கெடு முடிவடைந்து விட்டதால் வரும் 31-ம் தேதி கோட்டையை முற்றுகையிடுவோம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பெட்ரோல், டீசல் விலையை குறைக்காவிட்டால் 72 மணி நேரத்தில் கோட்டையை முற்றுகையிடுவோம் என அறிவித்தோம். தமிழக அரசுக்கு கொடுத்திருந்த 72 மணி நேர கெடு இன்றோடு முடிவடைந்து விட்டது.

இதுவரை தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திட்டமிட்டபடி வரும் 31ஆம் தேதி சென்னை கோட்டையை நோக்கி வரத்தான் போகிறோம். கோட்டையை முற்றுகையிடத்தான் போகிறோம்.

பாஜக நிர்வாகி பாலச்சந்திரன் கொலையில் தொடர்புடைய அனைவரையும் காவல்துறை கைது செய்ய வேண்டும். காவல்துறை கைது செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது. அவர்களை சட்டப்படி தண்டிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

கொல்லப்பட்ட பாலச்சந்திரனின் குடும்பத்தை பார்த்துக்கொள்வது கட்சியின் பொறுப்பு. அவர்களின் குடும்பம் எங்களுடைய குடும்பம்போன்றது.

இப்போதாவது காவல்துறை விழித்துக்கொள்ளட்டும். முதல்-அமைச்சர் அவர்கள் இப்போதாவது கட்சியின் பிடியில் இருந்து காவல்துறையை விடுவிக்கட்டும். அதை செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

சிறை என்பது குற்றவாளிகளை ஊக்குவிக்கும் யுனிவர்சிட்டியாக மாறியுள்ளது. குற்றவாளியை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும். அவர்களுக்கு ஆயுள் தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும். இந்த சம்பவம் சாதாரண மக்களின் மனதில் பெரும் அச்சத்தை உருவாக்கி உள்ளது. 19 நாட்களில் 20 கொலை நடந்துள்ளது. உளவுத்துறை சரியாக செயல்படவில்லை செயலிழந்து விட்டது.

தமிழக காவல்துறைக்கு என இந்திய அளவில் பெயர் இருக்கிறது. அரசியல் தலையீட்டால் அது இப்போது குறைந்துள்ளது. அதன் வெளிப்பாடுதான் பட்டப்பகலில் நடந்த இந்த கொலை. இதுபோன்று சமீப காலமாக பல சம்பவங்கள் நடந்துள்ளன.

எனவே, முதல்-அமைச்சர் உடனடியாக கவனம் கொடுத்து, ரவுடிகளை அடக்கி ஒடுக்க வேண்டும். மக்களுக்கு மிக முக்கியம் பாதுகாப்புதான்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story