'உயர்த்தப்பட்டதை ரத்து செய்யும் வரை மின் கட்டணத்தை செலுத்தமாட்டோம்'; ஈரோட்டில் விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பேட்டி
'உயர்த்தப்பட்டதை ரத்து செய்யும் வரை மின் கட்டணத்தை செலுத்தமாட்டோம்' என்று ஈரோட்டில் விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கூறினார்.
'உயர்த்தப்பட்டதை ரத்து செய்யும் வரை மின் கட்டணத்தை செலுத்தமாட்டோம்' என்று ஈரோட்டில் விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கூறினார்.
6 லட்சம் விசைத்தறிகள்
தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் அவசர கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு செயலாளர் வேலுச்சாமி தலைமை தாங்கினார். பொருளாளர் பாலசுப்பிரமணியம், ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். மாநில தலைவர் எல்.கே.எம்.சுரேஷ் கலந்து கொண்டு பேசினார். அதைத்தொடர்ந்து கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக மாநில தலைவர் எல்.கே.எம்.சுரேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
தமிழகத்தில் 1 லட்சத்து 41 ஆயிரம் மின் இணைப்பில், 6 லட்சம் விசைத்தறிகள் இயங்கி வருகிறது. இங்கு நேரடியாக 10 லட்சம் தொழிலாளர்களும், இதனை சார்ந்த தொழில்களில் 10 லட்சம் தொழிலாளர்களும் உள்ளனர். ஒரு நபருக்கு, 5 குடும்ப உறுப்பினர் என கணக்கிட்டால், ஒரு கோடிக்கும் அதிகமானவர்கள் இந்த தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர்.
மின் கட்டணம்
கடந்த, 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி நடத்திய தி.மு.க., அ.தி.மு.க.வில் ஜவுளி தொழில் மேம்படவும், ஜவுளித்தொழில் சார்ந்த தொழிலாளர்கள் சிறக்கவும் இலவச வேட்டி, சேலை திட்டம், பள்ளி சீருடை திட்டம், 750 யூனிட் இலவச மின்சாரம் வழங்கி சிறப்பித்துள்ளனர்.
எங்களுக்காக மானிய மின் திட்டத்தில் டேரிப் 3 ஏற்படுத்தினர். இந்த சூழலில் மின் கட்டணம் உயர்த்தி இருப்பது இந்த தொழிலை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அமைந்துள்ளது. இன்று (அதாவது நேற்று) நடந்த ஆலோசனை கூட்டத்தில், மின் கட்டண உயர்வை எங்கள் சங்க உறுப்பினர்களால் செலுத்த இயலாது என்றும், மின் கட்டண உயர்வை ரத்து செய்யும் வரை மின் கட்டணத்தை செலுத்த மாட்டோம் எனவும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்.
போராட்டம்
எங்களுடன் சேர்ந்த சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும்போது, நாங்களும் அதில் கலந்து கொள்வோம். முதல்-அமைச்சர், மின்சாரத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து எங்கள் கோரிக்கையை விளக்குவோம். எங்கள் கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில், அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம்.
தினமும் 6 லட்சம் விசைத்தறியில் 5 கோடி மீட்டருக்கும் மேல் துணி உற்பத்தியாகிறது. இதன் மதிப்பு ரூ.150 கோடி ஆகும். இந்த தொகைக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி.யாக, ரூ.7 கோடியே 50 லட்சமும், இந்த தொழில் சார்ந்த பிரிண்டிங், சைசிங், காலண்டரிங் என பல தொழில் மூலமாக ஜி.எஸ்.டி.யாக ரூ.20 கோடிக்கு மேலும் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. இந்தநிலையில் விசைத்தறியில் உற்பத்தி நிறுத்தப்பட்டால் அரசுக்கு தினமும் ரூ.20 கோடி வருவாய் இழப்பு ஏற்படும். 20 லட்சம் தொழிலாளர்கள் வேலையை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்படுவார்கள். எனவே விசைத்தறி தொழிலுக்கு அரசு உயர்த்திய மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் தலைமை ஆலோசகர் கருணாநிதி, அமைப்பு செயலாளர் கந்தவேல் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.