குடிநீர் பிரச்சினையை தீர்க்காவிட்டால் பதவியை ராஜினாமா செய்வோம்

கிணத்துக்கடவு பகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்காவிட்டால் பதவியை ராஜினாமா செய்வோம் என்று ஆலோசனை கூட்டத்தில் ஊராட்சி தலைவர்கள் ஆவேசமாக கூறினர்.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு பகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்காவிட்டால் பதவியை ராஜினாமா செய்வோம் என்று ஆலோசனை கூட்டத்தில் ஊராட்சி தலைவர்கள் ஆவேசமாக கூறினர்.
ஆலோசனை கூட்டம்
கிணத்துக்கடவு ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதை தீர்க்க நடவடிக்கை எடுப்பது குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், கிணத்துக்கடவு ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி தலைவர்கள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம், கோவை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் ஊராட்சி தலைவர்கள் கூறியதாவது:-
கிணத்துக்கடவு ஒன்றியத்தில் சொக்கனூர், அரசம்பாளையம், பணப்பட்டி, காட்டம்பட்டி, கப்பளாங்கரை, சிறுகளந்தை, சோழனூர், வரதனூர், தேவராயபுரம் உள்ளிட்ட கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. போர்வெல்களிலும், கிணறுகளிலும் தண்ணீர் வற்றி விட்டது. அம்பராம்பாளையம் குடிநீரும் சரிவர வழங்கப்படுவது இல்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் கூறியும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விரைவாக குடிநீர் பிரச்சினையை தீர்க்காவிட்டால் ஊராட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்வோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கண்காணிக்க வேண்டும்
பின்னர் கலெக்டரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) கமலக்கண்ணன் கூறுகையில், ஊராட்சி தலைவர்கள் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் இணைந்து கிணத்துக்கடவு ஒன்றியத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க மாதம் ஒருமுறை கூட்டம் நடத்த வேண்டும். ஊராட்சிகளுக்கு ஒரு நாளைக்கு எத்தனை லிட்டர் குடிநீர் கிடைத்துள்ளது என்பதை கண்டறிய தொட்டிகளில் மீட்டர்களை பொருத்த வேண்டும். குடிநீர் வினியோகிக்கும் நேரத்தை ஊராட்சி தலைவர்களுக்கு, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரியப்படுத்த வேண்டும். இருதரப்பினரும் ஒரு குழு ஏற்படுத்தி மக்களுக்கு முறையாக குடிநீர் கிடைக்கிறதா? என்று கண்காணிக்க வேண்டும் என்றார்.
நடவடிக்கை
குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் பேசுகையில், பொள்ளாச்சி-பாலக்காடு சாலையில் அடிக்கடி குழாய்களில் உடைப்பு, மின்தடை ஆகிய காரணங்களால் குடிநீர் வினியோகம் தடைபடுகிறது. தட்டுப்பாடு உள்ள கிராமங்களில் ஆய்வு செய்து, விரைந்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
இதில் அம்பராம்பாளையம் கூட்டு குடிநீர் திட்ட உதவி செயற்பொறியாளர் பிரகாஷ், இளநிலை பொறியாளர் சிவக்குமார், கிணத்துக்கடவு ஒன்றிய ஆணையாளர் ராதாகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) சிக்கந்தர் பாட்சா மற்றும் ஊராட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.






