நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் வெற்றி பெறுவோம்
நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் வெற்றி பெறுவோம்
கோவை
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று கோவையில் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
பாராட்டு விழா
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு கோவை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பாராட்டு விழா கோவை காளப்பட்டியில் உள்ள சுகுணா ஆடிட்டோரியத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதற்காக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இருந்து நேற்று மாலை கோவை வந்தார். விழா மேடைக்கு வந்த அவரை அங்கு திரண்டு இருந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் படுகர் இன மக்கள் தங்களின் பாரம்பரிய நடனமாடியும், கரகோஷம் எழுப்பியும், சால்வை மற்றும் புத்தகங்கள் வழங்கியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
விழாவுக்கு அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சி கொறடாவுமான முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுயர மாலை அணிவித்து பாராட்டி பேசினார். எம்.எல்.ஏ.க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், தாமோதரன், பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் அர்ச்சுனன், கே.ஆர்.ஜெயராம், வி.பி.கந்தசாமி, அமுல்கந்தசாமி, ஏ.கே.செல்வராஜ் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.
தொடர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கு வெள்ளி செங்கோல்,வேல், வீர வாள் வழங்கி தலையில் கிரீடம் வைக்கப்பட்டது.
விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது கூறியதாவது:-
தி.மு.க. வாரிசு அரசியல்
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தோம். ஏக மனதாக என்னை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்த அனைவருக்கும் நன்றி. அ.தி.மு.க.வில் மட்டும் தான் சாதாரண தொண்டன் கூட பொதுச்செயலாளர் ஆக முடியும். ஆனால் தி.மு.க.வில் கருணாநிதியின் குடும்பம் தான் ஆட்சி செய்யும். கருணாநிதி அவரைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக உள்ளார். அடுத்ததாக வாரிசு அரசியலுக்கு அடித்தளமாக உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்கி உள்ளார்கள்.
தி.மு.கவை சேர்ந்த மூத்த அமைச்சர் ஒருவர், கருணாநிதியுடன் அமைச்சராக இருந்தோம், மு.க. ஸ்டாலின் உடனும் அமைச்சராக உள்ளோம், உதயநிதி ஸ்டாலினோடும் தற்போது அமைச்சராக உள்ளோம். அடுத்து உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பநிதியுடனும் அமைச்சராக இருப்போம் என்று அடிமை சாசனத்தை எழுதி கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அ.தி.மு.க. அப்படி அல்ல. சாதாரண தொண்டனை மதிக்க கூடிய கட்சி அ.தி.மு.க. தான். தி.மு.க. ஒரு கம்பெனி போல செயல்பட்டு வருகிறது.
என்ன செய்தார்கள்?
தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றவர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா. எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்து இந்தியாவுக்கே முதன்மையாக திகழ்ந்தார்கள். தி.மு.க. ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் நெருங்கி இருக்கிறது. என்ன செய்தார்கள்? மக்கள் விரோத ஆட்சியாக நடந்து கொண்டு இருக்கிறது. அ.தி.மு.க.வை ஊழல் கட்சி என்று சொல்வது கண்டனத்திற்குரியது. இனி எந்த தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. வெற்றி பெறும். அ.தி.மு.க.வினர் மீது வழக்கு போடுவதை தவிர மு.க.ஸ்டாலின் எதுவும் செய்ய வில்லை.
கோவைக்கு அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை முடிக்காமல் கிடப்பில் போட்டுள்ளார்கள். மெட்ரோ ரெயில் குறித்து விரிவான திட்ட அறிக்கை மேற்கொண்டு பணிகளை தொடங்கும் நேரத்தில் தேர்தல் வந்து விட்டது. இப்போது மெட்ரோ ரெயில் திட்டத்தை மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தது போல பொய்யான தோற்றத்தை உருவாக்கி வருகிறார். கோவைக்கு அ.தி.மு.க.தான் மெட்ரோ ரெயில் திட்டத்தை கொண்டு வந்தது. கோவை மாவட்டத்திற்கு எந்த ஒரு திட்டத்தையும் இந்த அரசு கொண்டு வரவில்லை. சொத்துவரி, குடிநீர் கட்டணம், மின்கட்டணம் உள்பட அனைத்து வரிகளையும் உயர்த்தி மக்களின் தலையில் சுமையை ஏற்படுத்தியுள்ளது தி.மு.க. அரசு.
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரியை சேர்த்து 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். கோவை மாவட்டம் அ.தி.மு.க.வின் எக்கு கோட்டை. இப்போது இருந்தே தேர்தல் பணியை தொடங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் பங்கேற்றவர்கள்
விழாவில் முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி, தோட்ட தொழிலாளர் சங்க மாநில தலைவர் வால்பாறை அமீது, ராமநாதபுரம் பகுதி செயலாளர் டி.ஜெ.செல்வக்குமார், சுங்கம் பகுதி செயலாளர் காட்டூர் செல்வராஜ், காந்திபுரம் பகுதி செயலாளர் எம்.ஜி.ஜெ.ராஜ்குமார், கோவை புறநகர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் என்ஜினீயர் சந்திர சேகர், கவுன்சிலர் எஸ்.ஷர்மிளா சந்திரசேகர், இளைஞர் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் பப்பாயா ராஜேஷ், வக்கீல் ராஜேந்திரன், மாவட்ட அவைத்தலைவர் சாமி என்கிற குமாரசாமி, பகுதி செயலாளர் காளப்பட்டி கே.வி.ராஜேந்திரன், ஜெயலலிதா பேரவை பகுதி செயலாளர் குறிஞ்சி மலர் பழனிசாமி, அன்னூர் ஊராட்சி ஒன்றியம் கஞ்சப்பள்ளி ஊராட்சி தலைவர் சித்ரா சுப்பிரமணியம், கஞ்சப்பள்ளி ஊராட்சி துணைத்தலைவர் வசந்த் சண்முகம், 23-வது வார்டு செயலாளர் ரகுபதி, 8-வது வார்டு செயலாளர் குபேந்திரன், 6-வது வார்டு செயலாளர் சண்முக சுந்தரம் 7-வது வார்டு பொறுப்பாளர் தங்கராஜ், அன்னூர் வடக்கு ஒன்றிய செயலாளர் அம்பாள் பழனிசாமி, தெற்கு ஒன்றிய செயலாளர் ஓ.எஸ்.சாய் செந்தில், ஜெயலலிதா பேரவை செயலாளர் விஜயகுமார், இணை செயலாளர் நரசப்பன், ரகுபதி உள்பட திரளானவர்கள் கலந்துகொண்டனர்.