நெய்தல் திருவிழா நிறைவு


நெய்தல் திருவிழா நிறைவு
x
தினத்தந்தி 1 May 2023 7:00 PM GMT (Updated: 1 May 2023 7:00 PM GMT)

தூத்துக்குடியில் நடந்த நெய்தல் திருவிழா நேற்று நிறைவு பெற்றது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் நடந்த நெய்தல் திருவிழா நேற்று நிறைவு பெற்றது.

நெய்தல் திருவிழா

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் ஸ்பிக்- கிரீன் ஸ்டார் நிறுவனம் சார்பில் 'நெய்தல்-தூத்துக்குடி கலைவிழா' சங்கரப்பேரி விலக்கு பகுதியில் கடந்த 28-ந் தேதி தொடங்கியது. தமிழர்களின் பண்பாடு, கலை, கலாசாரம், நாகரீகத்தை பறைசாற்றும் வகையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த கிராமிய கலைஞர்கள் பங்கேற்று கலைநிகழ்ச்சிகளை நடத்தினர். 40-க்கும் மேற்பட்ட கிராமிய கலைநிகழ்ச்சிகளை 400-க்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்கள் செய்து காட்டினர்.

நிறைவு

கடந்த 4 நாட்களாக நடைபெற்று வந்த தூத்துக்குடி நெய்தல் கலை விழா நேற்றிரவு நிறைவு பெற்றது. இதனை முன்னிட்டு நடந்த நிறைவு விழாவுக்கு கனிமொழி எம்.பி. தலைமை தாங்கினார். அமைச்சர் கீதாஜீவன் முன்னிலை வகித்தார்.

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் என்.பி. ஜெகன், ஸ்பிக் நிறுவன முழுநேர இயக்குனர் எஸ்.ஆர்.ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கடைசி நாளான நேற்று தூத்துக்குடி இசைக் கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சி, சுப்பையா கலைக்குழுவினரின் ஜிம்பளா மேளம், சமர் கலைக்குழுவினரின் பறையாட்டம், திருவாரூர் எஸ்.எஹ்.சுஜித் கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சி, காரமடை கலைக்குழுவினரின் துடும்பாட்டம் மற்றும் வி.எம்.மெல்லிசை குழுவினரின் மெல்லிசை நிகழச்சி ஆகியவை நடைபெற்றன. மே தின விடுமுறை நாள் என்பதால் நேற்றும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதேபோல் கடந்த 11 நாட்களாக நடைபெற்ற 4-வது தூத்துக்குடி புத்தகத் திருவிழாவும் நேற்றுடன் நிறைவடைந்தது.


Next Story