களைகட்டிய மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம்; ஜிப்லைன் சாகசம், படகுசவாரி செய்து சுற்றுலா பயணிகள் உற்சாகம்
கொடைக்கானல் அருகே சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம் களைகட்டியுள்ளது. ஜிப்லைன் சாகசம், படகுசவாரி செய்து சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.
கொடைக்கானல் அருகே சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம் களைகட்டியுள்ளது. ஜிப்லைன் சாகசம், படகுசவாரி செய்து சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.
சூழல் சுற்றுலா மையம்
சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். பொதுவாக கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானோர் பிரையண்ட் பூங்கா, மோயர் பாயிண்ட், பைன்மரக்காடு, பில்லர்ராக், குணாகுகை, நட்சத்திர ஏரி உள்ளிட்ட சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து செல்வார்கள்.
இதேபோல் கொடைக்கானல் நகரில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் மன்னவனூர் கிராமம் உள்ளது. இங்கு வனத்துறை கட்டுப்பாட்டில் சூழல் சுற்றுலா மையம் அமைந்துள்ளது. அங்கு பசுமை புல்வெளிகளுக்கும், மலைமுகடுகளுக்கும் நடுவே சிறிய ஏரியும் உள்ளது.
இந்த ஏரியில் பரிசல் மற்றும் படகு சவாரி, குதிரை சவாரி உள்ளிட்ட சுற்றுலா பயணிகளை கவரும் அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. முன்பு இந்த சுற்றுலா மையம், சுற்றுலா பயணிகள் அறியாத இடமாக இருந்து வந்தது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாக இருந்தது.
ஜிப்லைன் சாகசம்
இதற்கிடையே மன்னவனூர் சூழல் சுற்றுலா மையத்தில், கடந்த மாதம் முதல் ஜிப்லைன் சாகசத்தை வனத்துறையினர் அறிமுகம் செய்தனர். இந்த சாகச அம்சமானது, மன்னவனூர் ஏரிக்கு மேல் சுமார் 250 மீட்டர் உயரத்தில் கம்பி வடத்தில் சுற்றுலா பயணிகள் பயணம் செய்யும் வகையில் அமைக்கப்பட்டது.
ஜிப்லைன் சாகசம் தொடங்கப்பட்ட ஓரிரு வாரங்களிலேயே சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் இங்கு சுற்றுலா பயணிகள் வருகை தற்போது அதிகரித்துள்ளது.
குறிப்பாக வார விடுமுறை நாட்களில் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் தவிர்க்கமுடியாத தேர்வாக தற்போது மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம் மாறியுள்ளது.
சுற்றுலா பயணிகள் படையெடுப்பு
இந்தநிலையில் இன்று வாரவிடுமுறை என்பதால் கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதேபோல் மன்னவனூர் சூழல் சுற்றுலா மையத்துக்கும் சுற்றுலா பயணிகள் படையெடுத்ததால் களைகட்டியது. அங்கு சுற்றுலா பயணிகள் ஏரியில் பரிசல் மற்றும் படகு சவாரி செய்தும், ஏரியை சுற்றி குதிரை சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.
மேலும் ஏரியின் மீது அமைக்கப்பட்டுள்ள ஜிப்லைன் சாகசத்தில் ஈடுபட்டு சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர். இதேபோல் ஏரி பகுதிக்கு செல்வதற்கு சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு 'ட்ரெக்கிங்' மேற்கொண்டும், பசுமையான புல்வெளி மைதானத்தில் அமர்ந்து செல்பி மற்றும் புகைப்படம் எடுத்தும் அவர்கள் பொழுதுபோக்கினர்.
புதுவித அனுபவம்
இதுகுறித்து சுற்றுலா பயணிகள் சிலர் கூறுகையில், கொடைக்கானலில் இருந்து மன்னவனூர் சூழல் சுற்றுலா மையத்திற்கு வரும் மலைப்பாதை பசுமை குகையாக உள்ளது. மலைப்பாதைகளில் அடுக்கடுக்காக காணப்படும் விவசாய நிலங்கள், மேகம் தவழும் ரம்மியமான சூழல் புதுவித பயண அனுபவமாக இருக்கிறது. அதேபோல் ஜிப்லைன் சாகசம் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களும் சிறப்பாக உள்ளது என்றனர்.
இதற்கிடையே சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், மன்னவனூரில் சிறுவர் பூங்கா அமைக்கும் பணிகளிலும் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.