புதுக்கோட்டையில் களைகட்டும் ஜல்லிக்கட்டு


புதுக்கோட்டையில் களைகட்டும் ஜல்லிக்கட்டு
x

தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில் புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு களைகட்டுகிறது. இந்த ஆண்டில் இதுவரை 62 இடங்களில் நடந்துள்ளது.

புதுக்கோட்டை

வீர விளையாட்டு

தமிழர்களின் வீர விளையாட்டானது ஜல்லிக்கட்டு. தமிழர்களின் பண்பாண்டையும், கலாசாரத்தையும் போற்றும் வகையில் பராம்பரியமாக இந்த விளையாட்டு இருந்து வருகிறது. ஜல்லிக்கட்டு தமிழர்களின் ஒரு அடையாளமாகும். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின் போது நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டானது காலப்போக்கில் வீரத்தை போற்றும் வகையில் கோவில் திருவிழாக்களில் ஒரு பகுதியாக ஜல்லிக்கட்டு போட்டியும் நடத்தப்படுகிறது.

விலங்குகள் துன்புறுத்தப்படுவதாக பீட்டா அமைப்பு தொடா்ந்த வழக்கால் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. அதன்பின் கடந்த 2017-ம் ஆண்டு தமிழக அரசால் இயற்றப்பட்ட அவசர சட்டத்தால் ஜல்லிக்கட்டு மீண்டும் நடைபெற்றது. இது தொடர்பான வழக்கிலும் ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை என சுப்ரீம் கோர்ட்டு கடந்த 18-ந் தேதி தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது. இந்த தீர்ப்பால் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு

இதற்கிடையில் இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு வழக்கம் போல ஜனவரி மாதம் தொடங்கியது. இந்த ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சியில் கடந்த ஜனவரி மாதம் 8-ந் தேதி நடைபெற்றது. அதன்பின் தொடர்ச்சியாக அடுத்தடுத்து ஜல்லிக்கட்டு ஆங்காங்கே நடைபெற்றது. பொங்கல் பண்டிகையின் போது உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெற்றாலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு திருவிழா போல ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில் இங்கு வாரத்திற்கு 2 அல்லது ஒரு ஜல்லிக்கட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு, மஞ்சுவிரட்டு என நடைபெற்று வருகிறது. இதேபோல பக்கத்து மாவட்டமான சிவகங்கையிலும் மஞ்சுவிரட்டு அதிகமாக நடைபெறுகிறது.

பார்வையாளர்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரையில் கோவில் திருவிழாக்கள் நடைபெறும் போது அதன் ஒரு பகுதியாக ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது பாரம்பரியமாக இருந்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமில்லாமல் பக்கத்து மாவட்டமான சிவகங்கை, திருச்சி, தஞ்சாவூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து காளைகளை அதன் உரிமையாளர்கள் அழைத்து வந்து பங்கேற்க வைப்பது உண்டு. மாடுபிடி வீரர்களும் ஆர்வமுடன் பங்கேற்பார்கள். இதனால் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடமானது திருவிழா போல காட்சியளிக்கும். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத வகையில் ஜல்லிக்கட்டை காண பார்வையாளர்கள் ஆர்வமுடன் குவிந்து விடுவார்கள்.

இதேபோல ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை சுற்றி சாலையோர கடைகள், பழங்கள், தண்ணீர் பாட்டில்கள், குளிர்பானங்கள் விற்பனை கடைகள், திண்பண்டங்கள் கடைகள் முளைத்துவிடும். அவர்களுக்கும் அன்றைய தினம் வியாபாரம் பெரிய அளவில் நடைபெறும். இதனால் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களை அறிந்து அங்கு சென்று கடைகளை போடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

62 இடங்களில் ஜல்லிக்கட்டு

இதேபோல காளைகளை அழைத்து வருவதில் சரக்கு வேன்கள் பயன்படுத்தப்படும். இந்த சரக்கு வேன்களுக்கும் ஆர்டர் கிடைத்து கொண்டே இருக்கும். மொத்தத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் போது அந்த பகுதியில் உள்ள சுற்றுவட்டாரம் முழுவதும் திருவிழாக்கோலம் பூண்டுவிடும். முதல் ஜல்லிக்கட்டு தொடங்குவதிலும், ஜல்லிக்கட்டு அதிகம் நடைபெறுவதிலும் புதுக்கோட்டை மாவட்டம் தான் முதலிடம் வகிக்கிறது.

இந்த ஆண்டில் இதுவரை ஜல்லிக்கட்டு 42 இடங்களிலும், மஞ்சுவிரட்டு 13 இடங்களிலும், வடமாடு மஞ்சுவிரட்டு 7 இடங்களிலும், என மொத்தம் 62 இடங்களில் நடந்துள்ளது. இந்த ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு வருகிற 31-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதற்கிடைப்பட்ட நாட்களிலும் ஜல்லிக்கட்டு ஆங்காங்கே நடைபெற உள்ளது. மொத்தத்தில் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு அதிகம் நடைபெற்ற மாவட்டத்தில் புதுக்கோட்டை முதல் இடம் வகிக்கும்.

பாதுகாப்பு நடைமுறைகள்

ஜல்லிக்கட்டை பொறுத்தவரை அரசு வகுத்துள்ள வழிமுறைகள், சுப்ரீம் கோர்ட்டின் அறிவுரைகள் படி நடத்தப்படுகிறது. பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி ஜனவரி முதல் மே மாதம் வரை நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. இதனை திருவிழா போல கொண்டாடி வருபவர்களின் கருத்துகள் வருமாறு:-

காளைகளின் உரிமையாளரான கைக்குறிச்சியை சேர்ந்த தமிழ்செல்வன்:- ``ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரியமானது. பீட்டா அமைப்பானது வெளிநாட்டு சதியுடன் நாட்டு இன மாடுகளை அழிக்கும் முயற்சியாக ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முயன்றது. தற்போது ஜல்லிக்கட்டுக்கான தடை நீக்கப்பட்டது அனைவரையும் மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. காளைகளை வளர்ப்போர் பெரும்பாலும் அதனையும் தங்கள் குழந்தையாக தான் வளர்த்து வருகின்றனர். காளைகளுக்கு நல்ல ஆரோக்கியமான உணவு அளித்தல், நன்கு குளிப்பாட்டி பராமரித்தல், அதன் இயல்பான குணங்களை அப்படியே செய்யவிடுதல், நீச்சல் பயிற்சி அளித்தல் இதைத்தான் மேற்கொள்கிறோம். ஜல்லிக்கட்டு ஒரு திருவிழா போன்றதாகும்.''

பரிசு பெறுவது பெருமையாக இருக்கும்

தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் அணி பேரவை நிறுவன தலைவர் ஆரியூர் சிவா:- ``தமிழகத்திலே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் நாட்டு மாடுகள் அதிகமாக உள்ளது. ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்க தற்போது பலரிடம் அதிகம் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பரம்பரையாக வளர்த்து வருபவர்கள் அதனை கைவிடாமல் காளைகளை வாங்கி வளர்த்து வருகின்றனர். அதனை ஜல்லிக்கட்டுகளில் பங்கேற்க வைத்து பரிசு பெறுவது ஒருவித பெருமையாக இருக்கும். ஜல்லிக்கட்டில் ஆன்லைன் டோக்கன் முறையை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். மாடுகளுக்கு மானிய விலையில் தீவனம் வழங்க வேண்டும். புதுக்கோட்டையில் ஒரு கால்நடை ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும். நவீன வசதிகளுடன் கூடிய கால்நடை மருத்துவமனை சிகிச்சை மையம் ஒன்று அமைக்க வேண்டும்.''

அதிக மாடுகளை அடக்க வேண்டும்

விராலிமலையை சேர்ந்த மாடுபிடி வீரர் விஜயகுமார் கூறியது:- ``ஒவ்வொரு முறை ஜல்லிக்கட்டுக்கு கிளம்பும் போதும் குலதெய்வ வழிபாட்டை முடித்துக் கொண்டு புதிய உற்சாகத்துடனும், உத்வேகத்துடனும் கலந்து கொள்வேன். பொதுவாக அனைத்து வீரர்களும் நன்றாக பயிற்சி பெற்றவர்களாக தான் இருப்பார்கள். விராலிமலை சுற்றுவட்டார பகுதிகளில் நடக்கும் ஜல்லிக்கட்டுகள் தவிர திருச்சி, திண்டுக்கல் கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டுகளிலும் ஆர்வமுடன் கலந்து கொள்வேன். அதற்காக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் எனது நண்பர்களுடன் சேர்ந்து மாடு பிடிப்பதற்கான நுணுக்கங்களையும், பயிற்சியையும் மேற்கொள்வோம். எந்த ஜல்லிக்கட்டுக்கு சென்றாலும் பரிசு எடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தை விட, அதிக மாடுகளை பிடிக்கவும், போட்டியில் கலந்து கொள்வதற்குமே மிகவும் ஆர்வமாக இருக்கும்.''

ஆர்வமாக இருக்கும்

இலுப்பூர் நவம்பட்டி சரக்கு வேன் டிரைவர் தனபால்:- ``நான் சரக்கு வேன் ஓட்டி வருவதில் ஜல்லிக்கட்டுக்கு காளைகளை அழைத்து செல்லும் போது மிகவும் மகிழ்ச்சி அடைவேன். அங்கு மைதானத்தில் என்னை போன்று பலரும் சரக்கு வேன்களில் காளைகளை அழைத்து வந்திருப்பார்கள். அங்கு களத்தில் ஜல்லிக்கட்டை ரசித்து பார்ப்போம். மாடுபிடி வீரர்கள் காளைகளை பிடிப்பது, வீரர்களிடம் சிக்காமல் காளை களத்தில் நின்று விளையாடுவதை காண்பது ஆர்வமாக இருக்கும். ஜல்லிக்கட்டுக்கு காளைகளை ஏற்றி செல்லும் போது ஒரு நாள் முழுவதும் அங்கேயே இருந்துவிடக்கூடிய நிலை வரும். இதற்கு எனக்கு வாடகை வருமானம் திருப்திகரமாக இருக்கும். அதேநேரத்தில் போட்டியை கண்ட மகிழ்ச்சியும் இருக்கும்.''

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஜல்லிக்கட்டில் குவியும் பரிசு பொருட்கள்...

ஜல்லிக்கட்டு நடைபெறும் தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில் புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு களைகட்டுகிறது. இந்த ஆண்டில் இதுவரை 62 இடங்களில் நடந்துள்ளது.போது காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்களுக்கும், மாடுபிடி வீரர்களிடம் சிக்காத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படுவது உண்டு. இந்த பரிசானது போட்டிப்போட்டு மேடையில் அறிவிக்கப்படும். அதாவது ரொக்கப்பரிசு, தங்க நாணயம், வெள்ளி பொருட்கள், டி.வி., மோட்டார் சைக்கிள், கார், எவர்சில்வர் பாத்திரங்கள், கட்டில், பீரோ, சைக்கிள், வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்டவை வழங்கப்படும். காளைகள் ஒவ்வொன்றும் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்படும் போது காளையை பற்றியும், அதன் உரிமையாளரின் பெயரையும் அறிவித்து, இந்த மாட்டை பிடித்தால் இந்த பரிசு பொருட்கள் வழங்கப்படும்... பிடிடா பிடிச்சுபாருடா... என ஒலிப்பெருக்கியில் அறிவிக்கும் போது மைதானத்தில் விசில் பறக்கும். அதேநேரத்தில் காளைகளையும் மாடுபிடி வீரர்கள் போட்டிப்போட்டு அடக்குவது உண்டு. சுழற்சி முறையில் களத்தில் இறக்கப்படும் மாடுபிடி வீரர்களில் அதிக காளைகளை அடக்கியவர்களுக்கு சிறப்பு பரிசும் வழங்கப்படுவது உண்டு. இதேபோல களத்தில் வீரர்களுக்கு தண்ணி காட்டி, வீரர்களை அஞ்சி ஓட வைத்த காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் உண்டு. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த காளைகளின் உரிமையாளர்கள் வெளி மாவட்டங்களிலும் பரிசுகளை குவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story