ஆக்கி போட்டி பரிசு கோப்பைக்கு சிவகங்கையில் வரவேற்பு
7-வது ஆசிய சாம்பியன்சிப் ஆக்கி போட்டி கோப்பைக்கு சிவகங்கையில் அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
சிவகங்கை
7-வது ஆசிய சாம்பியன்சிப் ஆக்கி போட்டி கோப்பைக்கு சிவகங்கையில் அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆக்கி போட்டி
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஆக்கி இந்தியா இணைந்து நடத்தும் 7-வது ஆசிய சாம்பியன்சிப் ஆடவர் ஆக்கி போட்டி கோப்பை அறிமுக விழா மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணன் வரவேற்று பேசினார். விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் கலந்து கொண்டு பேசியதாவது:- தமிழகத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கின்ற வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஆக்கி இந்தியா இணைந்து நடத்தும் ஆசிய சாம்பியன்சிப் கோப்பைக்கான 7-வது ஆடவர் ஆக்கி போட்டிகள் வருகின்ற 3-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை சென்னையில் நடைபெற உள்ளது.
இந்த போட்டிக்கு தமிழக அரசால் ரூ.16 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்போட்டியானது சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஆக்கி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், தென்கொரியா, ஜப்பான், சீனா, மலேசியா ஆகிய அணிகள் பங்கு பெற உள்ளன.
பரிசு கோப்பை
போட்டிகளில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் பரிசு கோப்பை தமிழ்நாடு முழுவதும் வலம்வர உள்ளது. இந்நிகழ்ச்சி கடந்த 20-ந் தேதி சென்னை மெரினா கடற்கரையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது. கோப்பையானது பல்வேறு மாவட்டங்களை கடந்து தற்போது சிவகங்கை மாவட்டத்திற்கு வந்தடைந்துள்ளது.
இப்போட்டியில் இந்திய அணியில் நமது தமிழகத்தில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த கார்த்தி கலந்து கொண்டு பெருமை சேர்க்கவுள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி ரவிக்குமார், மாங்குடி, சிவகங்கை நகர்மன்ற தலைவர் துரைஆனந்த், சிவகங்கை ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் மஞ்சுளா பாலசந்தர், சிவகங்கை நகர்மன்ற துணை தலைவர் கார்கண்ணன், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து, கண்டாங்கிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் மந்தக்காளை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.