சர்வதேச கோகோ போட்டியில் தங்கம் வென்ற மாணவிக்கு வரவேற்பு


சர்வதேச கோகோ போட்டியில் தங்கம் வென்ற மாணவிக்கு வரவேற்பு
x
தினத்தந்தி 20 Oct 2023 1:00 AM IST (Updated: 20 Oct 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

சர்வதேச கோகோ போட்டியில் தங்கம் வென்ற மாணவிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

சிவகங்கை

காளையார்கோவில்

காளையார்கோவில் அருகே தண்ணீர் பந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ஜீவகன், கண்மணி தம்பதியின் மகளான ஜாய் நடாஷா. 11-ம் வகுப்பு மாணவியான இவர் கோகோ போட்டியில் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார். கடந்த வாரம் மலேசியாவில் உள்ள மலாக்காவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கோகோ போட்டியில் இந்திய அணி சார்பில் கலந்து கொண்டு விளையாடி சாம்பியன் பட்டத்தை வென்றனர். தங்கப்பதக்கம் வென்ற கோகோ வீராங்கனை ஜாய் நடாஷாவிற்கு அவரது சொந்த ஊரான காளையார்கோவிலில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையொட்டி பஸ் நிலையத்தில் இருந்து குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் பேண்டு வாத்தியங்கள் முழங்க அவர் படித்த பள்ளிக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. பின்னர் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று மாணவியை பாராட்டினர். இதையடுத்து நிருபர்களிடம் மாணவி ஜாய் நடாஷா கூறும்போது, 6-ம் வகுப்பில் இருந்து கோகோ பயிற்சி பெற்று வருகிறேன். டெல்லியில் 15 நாட்கள் சிறப்பு விளையாட்டு முகாமில் பயிற்சி பெற்று மலேசியா சென்று சர்வதேச போட்டியில் பங்கேற்று இந்திய அணி தங்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்திய அணியில் தமிழகத்தில் இருந்து 2 பேர் தேர்வு செய்யப்பட்டோம். முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டியில் கோகோ விளையாட்டையும் சேர்க்க வேண்டும் என்று கூறினார்.


Next Story