அரசு கலைக்கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கின மாணவிகளுக்கு ரோஜா பூ கொடுத்து வரவேற்பு


அரசு கலைக்கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கின மாணவிகளுக்கு ரோஜா பூ கொடுத்து வரவேற்பு
x
தினத்தந்தி 4 July 2023 1:16 AM IST (Updated: 4 July 2023 3:23 PM IST)
t-max-icont-min-icon

அரசு கலைக்கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கின மாணவிகளுக்கு ரோஜா பூ கொடுத்து வரவேற்கப்பட்டனர்.

சேலம்

சேலம்

சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் நேற்று தொடங்கின. அப்போது மாணவிகள் ரோஜா பூ கொடுத்து வரவேற்கப்பட்டனர்.

வகுப்புகள் இன்று தொடக்கம்

தமிழகத்தில் கடந்த மே மாதம் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதைத்தொடர்ந்து உயர்கல்வி படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பது தொடங்கியது. அந்த வகையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கப்பட்டது. அதன்பிறகு மதிப்பெண்கள் அடிப்படையில் தர வரிசையில் கலந்தாய்வு மூலம் மாணவ, மாணவிகள் சேர்க்கை நடைபெற்றது.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் நேற்று முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கின. அதன்படி சேலம் மாவட்டத்தில் பள்ளிப்படிப்பை முடித்து முதன் முறையாக கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் வந்தனர். முதல் நாள் என்பதால் சில மாணவ-மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் வந்தனர்.

பூ கொடுத்து வரவேற்பு

கல்லூரிகளின் நுழைவுவாயிலில் நின்று முதல்வர்கள், பேராசிரியர்கள், பேராசிரியைகள் மற்றும் சீனியர் மாணவர்கள் ஆகியோர் முதலாமாண்டு மாணவிகளுக்கு ரோஜா பூ கொடுத்தும், மாணவர்களுக்கு இனிப்பு வழங்கியும் வரவேற்றனர். சேலம் வின்சென்ட் பகுதியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவ, மாணவிகளை வரவேற்கும் விதமாக தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித்திட்ட. மாணவர்கள் அணிவகுப்பு மரியாதை கொடுத்தனர்.

இதையடுத்து கல்லூரி முதல்வர் செண்பகலட்சுமி, மாணவிகளுக்கு கைக்கொடுத்ததுடன் ரோஜா பூ கொடுத்து வரவேற்றார். பின்னர் அவர் மாணவ, மாணவிகளுக்கு சில அறிவுரைகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அனைத்துத்துறை பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் கோரிமேட்டில் உள்ள மகளிர் கலைக்கல்லூரியிலும் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கின. மேலும் அங்கு முதலாமாண்டு மாணவிகளுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆற்றுப்படுத்தும் பயிற்சி

இதையொட்டி மாணவிகளுக்கான ஆற்றுப்படுத்தும் பயிற்சி நடைபெற்றது. இதில் கல்லூரி முதல்வர் காந்திமதி தலைமை தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், கடந்த சில ஆண்டுகளாக சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே மாணவிகள் உங்களது புகைப்படங்களை மற்றவர்களுக்கு பகிர கூடாது. படிப்பு சம்பந்தமாக மட்டுமே செல்போனை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். மேலும் விழாவில் மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

1 More update

Next Story