ரூ.43 லட்சத்தில் பாதுகாப்பு உபகரணம், நலத்திட்ட உதவிகள்


ரூ.43 லட்சத்தில் பாதுகாப்பு உபகரணம்,      நலத்திட்ட உதவிகள்
x

தொழிலாளர் நலத்துறை சார்பில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்

ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் தொழிலாளர் நலத்துறை சார்பில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்.

நலத்திட்ட உதவி

ராமநாதபுரத்தில் தொழிலாளர் நலத்துறை மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை சார்பில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்கள் மூலம் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் 1,777 பேருக்கு ரூ.27 லட்சத்து 39 ஆயிரம் மதிப்புள்ள பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் 551 பயனாளிகளுக்கு ரூ.15 லட்சத்து 78 ஆயிரம் மதிப்புள்ள அரசு நலத்திட்ட உதவி வழங்கும் விழா கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது.

கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன்.குமார் முன்னிலை வகித்தார். அமைச்சர் ராஜகண்ணப்பன் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் பேசியதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 10 ஆண்டுகளாக முடங்கி கிடந்த நலவாரியங்களை புதுப்பித்து தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். மாவட்டத்தில் வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்திலிருந்து தற்போது 55 ஆயிரம் ஆக குறைந்துள்ளது.

வேலைவாய்ப்பு முகாம்

மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் வழங்க சிறப்பு திட்டத்தை முதல்-அமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார். தற்போது பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர் போன்ற இடங்களில் பல்வேறு சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடிப்படை வசதிகள் மிக விரைவில் மேம்படுத்தப்படும். ஏற்கனவே நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமினை போல் கமுதியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும்.

இவ்வாறு பேசினார்.

இந்நிகழ்ச்சியில் கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன்.குமார் பேசியபோது, இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழ்நாட்டில் கட்டுமான தொழிலாளர்கள் உள்ளிட்ட 17 வாரியங்கள் உள்ளன. முதல்-அமைச்சர் உத்தரவின்படி மாவட்ட வாரியாக அனைத்து தொழிலாளர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன என்றார்.

விழாவில் நவாஸ்கனி எம்.பி., கூடுதல் கலெக்டர் பிரவீன்குமார், மாவட்ட ஊராட்சிகுழு துணைத்தலைவர் வேலுச்சாமி, தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிரமணியன், உதவி ஆணையர் மலர்விழி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story