மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள்
வேலூரில் நடந்த முகாமில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வழங்கினார்.
மருத்துவ முகாம்
வேலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பள்ளி கல்வித்துறை சார்பில் கைக்குழந்தை முதல் 18 வயது நிரம்பிய மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் வேலூர் அரசு முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன், பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் 4 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை, ரூ.8,750 மதிப்பில் ஒருவருக்கு சக்கர நாற்காலி, ரூ.33,360 மதிப்பில் 3 பேருக்கு காதொலி கருவி என்று ரூ.42,110 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
அதைத்தொடர்ந்து அங்கு மாற்றுத்திறன் குழந்தைகளை டாக்டர்கள் பரிசோதனை செய்வதையும், அடையாள அட்டை பெறுவது உள்பட பல்வேறு திட்டங்களுக்காக மாற்றுத்திறன் குழந்தைகள் பதிவு செய்வதையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
110 பேர் பங்கேற்பு
முகாமில் 110 மாற்றுத்திறன் குழந்தைகள் கலந்து கொண்டு தங்களின் விவரங்களை பதிவு செய்து அடையாள அட்டை, மருத்துவ சிகிச்சை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் பெறுவதற்கான மனுக்கள் அளித்தனர்.
இதில் பஸ், ரெயில் பயண சலுகை, உதவி தொகைக்கான பதிவு, முதல்-அமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சைக்கான பதிவு, மருத்துவ சான்றிதழ் வழங்குதல், மருத்துவர்கள் ஆலோசனை உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.
மாவட்டத்தில் மீதமுள்ள 7 ஊராட்சிகளிலும் அடுத்தடுத்து மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.