மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்


மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
x

காட்பாடியில் நடந்த விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வழங்கினார்.

வேலூர்

காட்பாடியில் நடந்த விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வழங்கினார்.

மாற்றுத்திறனாளிகள் தின விழா

வேலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா காட்பாடியில் உள்ள வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது. வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். கதிர்ஆனந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன், அமலுவிஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கலெக்டர் குமாரவேல் பாண்டியன் 135 மாற்று திறனாளிகளுக்கு ரூ.40 லட்சத்து 60ஆயிரம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும், மாற்றுத்திறனாளிக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் நீளம் தாண்டுதலில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்த ஹோலிகிராஸ் செவித்திறன் குறையுடையோர் மேல்நிலைப்பள்ளி மாணவிக்கு பாராட்டு சான்றிதழும் கேடயம் வழங்கினார். மேலும் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் சார்பில் காப்பீடு அட்டையும் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது; மாற்றுத்திறனாளிகள் என்ற பெயரை உருவாக்கியது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. மாற்றுதிறனாளிகளுக்காக அவர் பல்வேறு சலுகைகளை வழங்கி உள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்காக தேசிய அடையாள அட்டை, மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகளின் நலவாரிய சமூக பாதுகாப்பு திட்டம், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம், உதவி உபகரணங்கள், வங்கிக் கடன் மானியம் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

சிறப்பாக சிந்தித்து

மாற்றுத்திறனாளிகள் நல துறையை தனது கட்டுப்பாட்டில் முதலமைச்சர் வைத்துக்கொண்டு அவர்களுக்கு செயல்படுத்த வேண்டிய திட்டங்களை சிறப்பாக சிந்தித்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். சென்னை மெரினா கடற்கரையில் சாதாரண மனிதர்கள் கடல் நீரை தொட்டு மகிழ்ச்சியுடன் இருப்பதைக் கண்டு மாற்று திறனாளிகளுக்காக தனி கவனம் செலுத்தி கடல் நீரை தொட்டு மகிழ்ச்சியாக இருக்க அவர்களுக்கு என்று தனியாக மரப்பாதை வசதி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். மாற்றுத்திறனாளிகளுக்கு என்று தனிப்பட்ட திறமைகள் இருக்கிறது அவர்களுக்காக நடத்தப்படும் பள்ளிகள் பல்வேறு வகையான தொண்டு நிறுவனங்கள் அவர்கள் மீது தனி கவனம் செலுத்தி மேலும் அவர்களைஉற்சாகமும், ஊக்கமும் அளித்து அவர்களை செம்மைப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, உதவி கலெக்டர் பூங்கொடி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு, காட்பாடி ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன், துணைத்தலைவர் சரவணன், காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன், மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னிய ராஜா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story