மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் நலத்திட்ட உதவி; கலெக்டர் வழங்கினார்
தென்காசியில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் துரை ரவிச்சந்திரன் வழங்கினார்.
தென்காசி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் துரை. ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்துமாதவன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுதா, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் சிவசங்கரன், ஆதி திராவிடர் நலத்துறை அலுவலர் நடராஜன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட 265 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. இந்த மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா? என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் கலெக்டர் அறிவுறுத்தினார்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.8,500 செலவில் காதொலி கருவிகளும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் 6 பேருக்கு ஒளிரும் மடக்கு குச்சிகள் தலா ரூ.8500 செலவிலும் ஆக மொத்தம் ரூ 68,000 மதிப்பில் உதவி உபகரணங்களை கலெக்டர் துரை. ரவிச்சந்திரன் வழங்கினார்.