ரூ.1 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
சோழ வித்தியாபுரம் ஊராட்சியில் ரூ.1 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
வேளாங்கண்ணி:
வேளாங்கண்ணியை அடுத்த சோழ வித்தியாபுரம் ஊராட்சியில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் இறந்தவர்களின் உடலை வைக்க வாடகைக்கு எடுக்கும் குளிர் பதன சவப்பெட்டி மற்றும் நாற்காலியை ஊராட்சி நிர்வாகம் சார்பில் இலவசமாக ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனை தொடர்ந்து சோழ வித்தியாபுரம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.1 லட்சம் மதிப்பில் இறந்தவர்களின் உடலை வைப்பதற்கான குளிர்பதன சவப்பெட்டி மற்றும் 50 நாற்காலியை வாங்கி மக்கள் பயன்பாட்டிற்கு வைத்தனர். இதன் மூலம் இந்த ஊராட்சியில் இறப்பு ஏற்பட்டால் வாடகை இல்லாமல் இவற்றை அவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். அதற்காக கிராம மக்கள் எந்த ஒரு கட்டணமும் செலுத்த வேண்டாம் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த சேவையின் தொடக்கத்தை நாகை மாலி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் கோமதி தமிழ்ச்செல்வன், பேரூராட்சி முன்னாள் தலைவர் ஜூலியட் அற்புதராஜ், ஊராட்சி மன்ற துணை தலைவர் சிவஞானம் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.