மாநகராட்சி என்ன தான் செய்கிறது? சாலைகளில் கழிவுநீர் ஆறாக ஓடுகிறது;மஞ்சள் காமாலையும், டெங்குவும் பரவுகிறது மேயரிடம் தி.மு.க.- அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வாக்குவாதம்


மாநகராட்சி என்ன தான் செய்கிறது? சாலைகளில் கழிவுநீர் ஆறாக ஓடுகிறது;மஞ்சள் காமாலையும், டெங்குவும் பரவுகிறது மேயரிடம் தி.மு.க.- அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வாக்குவாதம்
x
தினத்தந்தி 23 Sept 2023 1:29 AM IST (Updated: 23 Sept 2023 1:29 AM IST)
t-max-icont-min-icon

மதுரை சாலைகளில் கழிவுநீர் ஆறாக ஓடுகிறது. மஞ்சள் காமாலையும், டெங்குவும் வேகமாக பரவுகிறது. மாநகராட்சி என்ன தான் செய்கிறது? என்று மேயரிடம் தி.மு.க.- அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வாக்குவாதம் செய்தனர்.

மதுரை


மதுரை சாலைகளில் கழிவுநீர் ஆறாக ஓடுகிறது. மஞ்சள் காமாலையும், டெங்குவும் வேகமாக பரவுகிறது. மாநகராட்சி என்ன தான் செய்கிறது? என்று மேயரிடம் தி.மு.க.- அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வாக்குவாதம் செய்தனர்.

ரூ.10 ஆயிரம் அபராதம்

மதுரை மாநகராட்சி கூட்டம், மேயர் இந்திராணி தலைமையில் அண்ணாமாளிகையில் நேற்று நடந்தது. கமிஷனர் பிரவீன் குமார், துணை மேயர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியவுடன், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் சோலைராஜா எழுந்து நின்று கடந்த கூட்டத்தில் மாநகரில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் குறைந்த பட்சமாக ரூ.5 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை குடிநீர் இணைப்பு கட்டணம் வசூலிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து ஆராய்ந்து முடிவெடுக்க குழு அமைக்கப்படும் என்றீர்கள். ஆனால் இதுவரை குழு அமைக்கவில்லை என்றார்.

இதற்கு கமிஷனர், முல்லை பெரியாறு குடிநீர் திட்டத்தின் கீழ் கடன் வாங்கும் தொகைக்காக சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. அதன்படி தான் குடிநீர் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. இது செயல்பாட்டுக்கு வருமா? என்பதனை என்னால் உறுதியாக சொல்ல முடியாது என்றார். பின்னர் மண்டல தலைவர்கள் பேசினர்.

கிழக்கு மண்டல தலைவர் வாசுகி பேசும் போது, மழை பெய்தால் நத்தம் சாலையில் மழைநீர் வாகனங்கள் மூழ்கும் அளவுக்கு நீர் தேங்குகிறது. அங்குள்ள மழைநீர் வாய்க்கால்களில் உள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என்றார். மேலும், அய்யர் பங்களா பகுதிகளில் மாடுகள் சுற்றி திரிகின்றன. அதனை கட்டுப்படுத்த வேண்டும் என்றார். அதற்கு பதிலளித்த கமிஷனர் பிரவீன் குமார், சாலைகளில் நடமாடும் மாடுகளை பிடித்து உடனடியாக ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது என்றார்.

ஆவேசம்

மண்டல தலைவர் சரவண புவனேஷ்வரி பேசும் போது, வார்டு அலுவலகங்களில் பணிபுரியும் மாநகராட்சி பணியாளர்கள் பணிக்கு வருகிறார்களா? இல்லையா? என்பது கண்காணிக்கப்படவில்லை. மண்டல அலுவலகங்களை போல், அவர்கள் வருகையை உறுதி செய்வதற்கு வார்டு அலுவலகங்களில் 'பயோமெட்ரிக்' வருகை பதிவேடு அமைக்க வேண்டும் என்றார். அதன்பின் மண்டல தலைவர் முகேஷ்சர்மா பேசும் போது எங்கள் மண்டலத்திற்கு உட்பட்ட சில வார்டுகளில் கழிவு நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது என்றார். உடனே அ.தி.மு.க. கவுன்சிலர்கள் சண்முகவள்ளி மற்றும் ரூபன் குமார் எழுந்து நின்று பல முறை மாநகராட்சியில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. கழிவுநீர் பிரச்சினைக்கு எப்போது தான் தீர்வு காண்பீர்கள். உங்களால் முடியாவிட்டால் சொல்லுங்கள். நாங்கள் அதனை போஸ்டர் அடித்து ஓட்டுகிறோம் என்றனர். உடனே மேயர், கடந்த 10 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் இது போன்று தான் போஸ்டர் அடித்து ஒட்டி கொண்டு இருந்தீர்களா? உங்கள் ஆட்சியில் நீங்கள் சரியாக பணிகளை செய்யாததால் தான் இப்போது இது போன்ற பிரச்சினை ஏற்பட்டு இருக்கிறது என்றார்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் சோலைராஜா, நீங்கள் பொறுப்புக்கு வந்த 2 ஆண்டுகள் ஆகி விட்டது. நீங்கள் என்ன தான் திட்டத்தை கொண்டு வந்தீர்கள். செயல்படுத்தினீர்கள் என்று சொல்ல முடியுமா?. மக்களின் எந்த பிரச்சினைக்கும் தீர்வு காணப்பட வில்லை. சாலைகளில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் நகர் முழுவதும் டெங்கும், மஞ்சள் காமாலையும் வேகமாக பரவுகிறது. நரிமேடு, செல்லூர் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் 30 பேர் மஞ்சள் காமாலைக்கும், 100-க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உங்களுக்கு எண்ணிகையில் சந்தேகம் இருந்தால் வாருங்கள் இப்போதே பெரிய ஆஸ்பத்திரி போவோம் என்று ஆவேசமாக கூறினார்.

வாக்குவாதம்

அந்த சமயத்தில் தி.மு.க. கல்விக்குழு தலைவர் ரவிச்சந்திரன் எழுந்து நின்று மேயரையே குற்றம் சுமத்தி பேசாதீர்கள் என்றார். அதற்கு உடனே சில தி.மு.க. கவுன்சிலர்கள் எழுந்து நின்று, ரொம்ப மேயருக்கு முட்டுக்கொடுக்காதீர்கள். இப்போது மக்கள் பிரச்சினைகளை தான் அவர்கள் (அ.தி.மு.க.) பேசுகிறார்கள். அதனை நாம் தீர்த்து வைக்க வேண்டும். பின்னர் தி.மு.க. கவுன்சிலர்கள்-அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கழிவுநீர் பிரச்சினைகள் குறித்து சிறிது நேரம் மேயரிடம் வாக்குவாதம் செய்தனர்.


Next Story