வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 2 வாலிபர்கள் கதி என்ன?
எடப்பாடி அருகே சரபங்கா நதியில் குளித்த போது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 2 வாலிபர்களை தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
எடப்பாடி:-
எடப்பாடி அருகே சரபங்கா நதியில் குளித்த போது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 2 வாலிபர்களை தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பட்டறை தொழிலாளிகள்
சேலம் மாவட்டம், எடப்பாடி நகராட்சி நைனாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அர்ஜூனன். இவருடைய மகன் கவுதமன் (வயது 24). எடப்பாடி ஒன்றியம் ஆவணி பேரூர் கீழ் முகம் மசையன் தெரு பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவருடைய மகன் அய்யப்பன் (29).
அய்யப்பனும், கவுதமனும் பட்டறை தொழிலாளிகள் ஆவார்கள். இவர்கள் இருவரும் தங்கள் நண்பர்களான கவுண்டம்பட்டியை சேர்ந்த சேட்டு (30), கார்த்திக் (32) ஆகியோருடன் நேற்று மாலையில் சரபங்கா நதிக்கு குளிக்க வந்துள்ளனர்.
ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர்
எடப்பாடி பகுதியில் தொடர் மழை காரணமாக சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இருப்பினும் வழக்கமாக குளிக்கும் இடம் தானே என்று அய்யப்பனும், கவுதமனும் நண்பர்களுடன் ஆற்றில் இறங்கி குளித்தனர்.
அப்போது வெள்ளப்பெருக்கு காரணமாக ஆற்றில் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால், கவுதமன் மற்றும் அய்யப்பன் ஆகிய இருவரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் மூழ்கியதாக கூறப்படுகிறது. அவர்களை காப்பாற்ற முயற்சித்த அவரது நண்பர்கள் முடியாத நிலையில் எடப்பாடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
தேடும் பணி தீவிரம்
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் ராமன், எடப்பாடி இன்ஸ்பெக்டர் சந்திரலேகா மற்றும் போலீசார் சரபங்கா நதிக்கரையில் முகாமிட்டு நதியில் மூழ்கிய வாலிபர்களை தேடும் பணியை தீவிரப்படுத்தினர்.
பேரிடர் மீட்பு வீரர்கள் மற்றும் உள்ளூர் மீனவர்களை கொண்டு, தண்ணீரில் மூழ்கிய வாலிபர்களை தொடர்ந்து தேடி வருகின்றனர். எடப்பாடி அருகே சரபங்கா நதியில் வாலிபர்கள் 2 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.