'நீட்' தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் பெற்ற மதிப்பெண் எவ்வளவு? - கல்வித் துறை பட்டியல் வெளியீடு


நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் பெற்ற மதிப்பெண் எவ்வளவு? - கல்வித் துறை பட்டியல் வெளியீடு
x

'நீட்' தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் பெற்ற மதிப்பெண் எவ்வளவு? என்பது குறித்து கல்வித்துறை பட்டியல் வெளியிட்டுள்ளது.

சென்னை,

நாடு முழுவதும் 20 லட்சத்து 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதிய 'நீட்' தேர்வு முடிவு கடந்த 13-ந்தேதி வெளியானது. இந்த தேர்வை 11 லட்சத்து 46 ஆயிரம் மாணவ-மாணவிகள் வெற்றி பெற்று இருந்தனர். தமிழ்நாட்டை பொறுத்தவரையில், ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 516 பேர் எழுதியதில், 78 ஆயிரத்து 693 பேர் தேர்ச்சி பெற்றனர்.

தமிழ்நாட்டில் தேர்ச்சி பெற்றவர்களில் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் எவ்வளவு பேர் தேர்ச்சி பெற்றனர் என்ற விவரத்தை கல்வித் துறை கடந்த 2 தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. அதன்படி, அரசு பள்ளி மாணவ-மாணவிகள் நடப்பாண்டில் நீட் தேர்வை எழுத 12 ஆயிரத்து 997 பேர் எழுதியதாகவும், அவர்களில் 3 ஆயிரத்து 982 பேர் வெற்றி பெற்றதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை குறைவு என்றாலும், அதற்கு முந்தைய ஆண்டுகளைவிட அதிகமான பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்ச்சி பெற்ற 3 ஆயிரத்து 982 அரசு பள்ளி மாணவ-மாணவிகள் நீட் தேர்வில் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றார்கள் என்ற விவரத்தையும் கல்வித் துறை வெளியிட்டு இருக்கிறது.

அதன்படி, நீட் தேர்வில் 720 மதிப்பெண்ணுக்கு 600 மதிப்பெண் மேல் பெற்றவர்கள் ஒரு மாணவி உள்பட 3 பேர் ஆவார்கள். 501 மதிப்பெண்ணுக்கு மேல் 23 பேரும், 401 மதிப்பெண்ணுக்கு மேல் 127 பேரும், 301 மதிப்பெண்ணுக்கு மேல் 437 பேரும், 201 மதிப்பெண்ணுக்கு மேல் 651 பேரும், 107 மதிப்பெண்ணுக்கு மேல் 2 ஆயிரத்து 741 பேரும் பெற்று இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இவர்களில் எத்தனை பேருக்கு மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கும்? என்ற எதிர்பார்ப்பு ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மத்தியில் இருந்து வருகிறது.


Next Story