இருசக்கர வாகனத்தில் செல்லும் போது பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் தலைகவசம் அவசியம் போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் குமார் பேச்சு


இருசக்கர வாகனத்தில் செல்லும் போது பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் தலைகவசம் அவசியம் போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் குமார் பேச்சு
x
தினத்தந்தி 9 Sept 2023 2:15 AM IST (Updated: 9 Sept 2023 2:31 AM IST)
t-max-icont-min-icon

மதுரை நகரில் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் தலைகவசம் அவசியம் போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் குமார் தெரிவித்துள்ளார்.

மதுரை


மதுரை நகரில் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் தலைகவசம் அவசியம் போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் குமார் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து விதிமீறல்

மதுரை போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு பதவியேற்றார். அன்றைய தினத்தில் இருந்து நகரில் சாலை விபத்துகளை தடுப்பது குறித்து பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் ஆவணி, மாசி வீதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

725 வழக்கு

இந்தநிலையில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் தலைகவசம் அவசியம் என்றும் அதனை பின்பற்றாதவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்க உத்தரவிட்டார். அதன்படி நேற்று முன்தினம் ஒரே நாளில் 725 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து போக்குவரத்து துணை கமிஷனர் குமார் கூறும் போது, மதுரை நகரில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்று விபத்தில் சிக்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனை தடுக்கும் வண்ணம் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கு தலைகவசம் அவசியம் என்பதை வலியுறுத்தி வருகிறோம். அதனை பின்பற்றாமல் வாகனங்களில் சென்றவர்கள் 725 பேர் மீது ஒரேநாளில் வழக்குப்பதிவு செய்துள்ளோம்.

ரூ.25 லட்சம் வசூல்

மேலும் மதுபோதையில் வாகனம் ஓட்டி வழக்கில் சிக்கியவர்கள் அபராதம் கட்டாமல் வாகனத்தை ஓட்டியவர்களை அடையாளம் கண்டு, 225 பேரிடம் 2 நாட்களில் மட்டும் 25 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. இது தவிர நகரில் தேவையில்லாத இடத்தில் இருக்கும் ஒருவழிபாதை குறித்து ஆய்வு செய்து அதனை நீக்க உள்ளோம். குறிப்பாக ரெயில்வே நிலையம் எதிரே உள்ள மேலவெளிவீதி சாலை, அரசு ஆஸ்பத்திரி சாலை, தல்லாகுளம் சாலை ஆகியவற்றை ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் அந்த சாலையில் போக்குவரத்து தொடங்குவது குறித்து கமிஷனரிடம் ஆலோசனை பெற்று போக்குவரத்தை தொடங்குவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story