வனத்துறையினர் தாக்கியதில் வாலிபர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு


வனத்துறையினர் தாக்கியதில் வாலிபர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 27 Jun 2023 1:00 AM IST (Updated: 27 Jun 2023 3:37 PM IST)
t-max-icont-min-icon

கடமலைக்குண்டு அருகே வனத்துறையினர் தாக்கியதில் வாலிபர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி

வனத்துறையினர் தாக்குதல்

சின்னமனூர் அருகே உள்ள பூசாணம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 30). இவர் மலை மாடுகள் வளர்த்து வருகிறார். நேற்று, மேகமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட கூடாம்பாறை மலைப்பகுதியில் மலை மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டு, விட்டு பூசாணம்பட்டிக்கு மகேந்திரன் புறப்பட்டார். அவருடன் உறவினர் சாமிநாதன் (20) உள்பட 4 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர். அவர்கள் கடமலைக் குண்டு அருேக மஞ்சனூத்து சோதனை சாவடி வழியாக சென்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் மகேந்திரனை தடுத்து நிறுத்தினர்.

அப்போது வனத்துறையினரிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அவரையும், சாமிநாதனையும் வனத்துறையினர் தாக்கியதாக கூறப்படுகிறது. உடனே மற்ற 2 பேரும் அங்கு இருந்து பஸ்சில் ஏறிச் சென்று விட்டனர். வனத்துறையினரிடம் இருந்து மகேந்திரனும், சாமிநாதனும் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.

மயங்கி விழுந்ததால் பரபரப்பு

இதுகுறித்து மேகமலை வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மேகமலை வனப்பகுதியில் வனச்சரகர் அஜய் தலைமையில் வனத்துறையினர் மகேந்திரனையும், சாமிநாதனையும் தடுத்து நிறுத்தினர். பின்னர் விசாரணைக்காக 2 பேரையும் வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு மகேந்திரனை வனத்துறையினர் மீண்டும் தாக்கியதாக கூறப்படுகிறது. அப்போது அவர் தலையில் அறுவை சிகிச்சை செய்து மாத்திரைகள் சாப்பிட்டு வருவதாக கூறியதாக தெரிகிறது. இந்த நிலையில் மகேந்திரனுக்கு திடீரென்று வலிப்பு ஏற்பட்டு மயங்கினார். இதுகுறித்து அவரது உறவினர்களுக்கு வனத்துறையினர் தகவல் தெரிவித்தனர்.

உடனே அவர்கள் அங்கு வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதற்கிடையே தகவலறிந்த விவசாயிகள் சங்கத்தினர் பாதிக்கப்பட்ட மகேந்திரனிடம் சம்பவம் தொடர்பாக கேட்டறிந்தனர். பின்னர் வனத்துறையினரை கண்டித்து விரைவில் ஆர்ப்பாட்டம் மற்றும் முற்றுகை போராட்டம் நடத்த உள்ளதாக கூறினர். இது குறித்து கடமலைக்குண்டு போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story