ஆனைமலையில் தீயணைப்பு நிலையம் அமைவது எப்போது?-பொதுமக்கள் எதிர்பார்ப்பு
ஆனைமலையில் தீயணைப்பு நிலையம் அமைவது எப்போது? என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
ஆனைமலை,
ஆனைமலையில் தீயணைப்பு நிலையம் அமைவது எப்போது? என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
தீ விபத்துகள்
ஆனைமலையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆனைமலை தாலுகாவாக அறிவிக்கப்பட்டது. தாலுகாவாக அறிவித்து 4 ஆண்டுகள் கடந்தும் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யாமல் உள்ளன. இதில் தற்போது தீயணைப்பு நிலையம் வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அந்த கோரிக்கைக்கு இதுவரை சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், அரசு செவிசாய்க்கவில்லை. ஆனைமலை பகுதியில் 23 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தென்னை விவசாயம் மற்றும் சுமார் 530 ஏக்கர் பரப்பளவில் நெல் விவசாயம் நடைபெறுகிறது. கோட்டூர், பெத்தநாயக்கனூர் சேத்துமடை, சின்னப்பம்பாளையம், ஒடைய குளம் குஞ்சிபாளையம், அம்பராம்பாளையம் போன்ற பகுதியில் தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் மதிப்பு கூட்டு பொருளான கயிறு, நார் கட்டி, பித், பிளக்கட்டி, மட்டை தயாரிப்பது என 68-க்கும் மேற்பட்ட நார் தொழிற்சாலைகள் உள்ளன. 10-க்கும் மேற்பட்ட நூல் மில்கள் உள்ளன. இப்பகுதியில் ஆண்டுக்கு குறைந்தது சுமார் 20-க்கும் மேற்பட்ட தீ விபத்துகள் ஏற்படுகிறது.
பல கோடி மதிப்பில் பொருட்கள்
ஆனைமலையில் ஏற்படும் தீ விபத்துகளை தடுக்க பொள்ளாச்சியில் இருந்து ஆனைமலை பகுதிக்கு தீயணைப்பு வீரர்கள் மற்றும் தீயணைப்பு வாகனம் வருவதற்குள் பல கோடி ரூபாய் பொருட்கள் தீயில் கருகி வீணாகிவிடுகிறது. மேலும் கோடை காலங்களில் வனப்பகுதிகளுக்குள் காட்டுத்தீ ஏற்பட்டால் அதை அணைப்பதற்கும் பொள்ளாச்சியில் இருந்துதான் தீயணைப்பு வாகனங்கள் வரவேண்டும். அதற்குள் தீ விபத்தினால் ஏராளமான செடி-கொடிகள் கருகி விடுகின்றன. அதனால் ஆனைமலை பகுதியில் தீயணைப்பு நிலையம் இருந்தால் இதுபோன்ற சேதங்களை தவிர்க்கலாம் என்று பொதுமக்கள், தொழில் அமைப்பினர் கூறுகிறார்கள். மேலும், தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்பதே அவர்களின் பல ஆண்டு கோரிக்கையாகும். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
சின்னப்பம்பாளையம் சுகுமார் (விவசாயி) ஆனைமலை அடுத்துள்ள சின்னப்பம்பாளையம் பகுதியில் தென்னை விவசாயம் பிரதானமாக உள்ளது. மேலும் நான், ஏரளமான ஆடு, மாடு கோழி என கால்நடைகள் வைத்து வளர்த்து வருகிறேன். சில சமயங்களில் கால்நடைகள் விளைநிலங்களுக்குள் உள்ள கிணற்றுக்குள் தடுமாறி விழுந்து விடுகின்றன. இந்த கால்நடைகளை விவசாயிகளால் மீட்க முடிவதில்லை. இதனால் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டால் அவர்கள் வருவதற்கு காலதாமதம் ஆகிறது. மேலும் கால்நடைகளுக்கு உணவாக வைக்கோலில் தீ பிடித்தால் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் வருவதற்குள் ஏராளமான பொருட் சேதங்களும் தீயில் கருகி வீணாகின்றன. ஒருசில நேரங்களில் கால்நடைகள் பரிதாபமாக இறந்து விடுகின்றன. அதனால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெள்ளப்பெருக்கில் சிக்குகிறார்கள்
வேட்டைக்காரன் புதூர் விக்கி (கல்லூரி மாணவர்):-ஆனைமலை பகுதியில் மாசாணி அம்மன் கோவில் மற்றும் ஆனைமலை ஆளியாற்றங்கரை பகுதிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. வெளியூரில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஆனைமலை ஆற்றின் ஆழம் அதன் ஆபத்து எதுவும் அறியாமல் ஆற்றில் குளித்து மகிழ்கின்றனர். ஆழியார் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். அந்த சமயத்தில் சிக்கியவர்களை மீட்க வேண்டுமென்றால் பொள்ளாச்சியில் இருந்து ஆனைமலைக்கு சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் கால தாமதம் ஏற்படுகிறது. இதனால் சில சமயங்களில் உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே இதுபோன்ற சேதங்களை தவிர்க்க ஆனைமலைக்கு தீயணைப்பு நிலையம் வேண்டும்.
பல லட்சம் நஷ்டம்
ஆனைமலை பிரகாஷ் (தனியார் மில் ஊழியர்):- ஆனைமலை பகுதியில் மட்டை மில் மேலாளராக பணியாற்றி வருகிறேன். தென்னையில் இருந்து நார்த் ஆகியவற்றை வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அப்போது சில சமயங்களில் மில்லில் தீ விபத்து ஏற்பட்டால் பொள்ளாச்சியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் மதிப்பு கூட்டு பொருள்கள் ஏராளம் தீயில் கருகி வீணாகின்றன. இதனால் பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. மக்கள் சார்பிலும் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், இதுவரையில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படவில்லை. மாதத்துக்கு குறைந்தது 2 தொழிற்சாலைகளிலாவது தீவிபத்து ஏற்படுகிறது. ஆனைமலையில் தீயணைப்பு நிலையம் அமைப்பதாக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தனர். ஆனால் தற்போது வரை தீயணைப்பு நிலையம் அமைக்கப்படவில்லை. எனவே தீயணைப்பு அலுவலகம் அமைக்க அரசு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.
உயிர் சேதம் ஏற்படுவதற்குள்...
ஆனைமலை மாரியப்பன் (ஐஸ் வியாபாரி):- கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆனைமலை அண்ணாநகர் அருகில் பனைமரத்தில் திடீரென தீப்பிடித்தது. இதையடுத்து உடனடியாக பொள்ளாச்சி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் கழித்துதான் வந்தனர். ஆனால் அதற்குள் அக்கம் பக்கத்தினர் கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைத்தனர். பொதுமக்கள் வசிக்கும் வீட்டில் தீ பற்றினால் தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு ஒரு மணி நேரம் ஆகிறது. அதற்குள் எண்ணற்ற பொருட்கள் தீயில் கருகி சேதமாகிவிடுகிறது. மேலும் உயிர் சேதம் ஏற்படுவதற்கு அதிகளவு வாய்ப்புள்ளது. இதனை தடுக்க ஆனைமலை தாலுகாவுக்கு என தனி தீயணைப்பு அலுவலகம் மற்றும் தீயணைப்பு வாகனம் அமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.