கள்ளக்குறிச்சி வீரசோழபுரத்தில் உள்ளஅர்த்தநாரீஸ்வரர் கோவில் சீரமைப்பு பணி எப்போது தொடங்கும்?தமிழ்நாடு அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி


கள்ளக்குறிச்சி வீரசோழபுரத்தில் உள்ளஅர்த்தநாரீஸ்வரர் கோவில் சீரமைப்பு பணி எப்போது தொடங்கும்?தமிழ்நாடு அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 16 Aug 2023 6:45 PM GMT (Updated: 16 Aug 2023 6:46 PM GMT)

கள்ளக்குறிச்சி வீரசோழபுரத்தில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவில் சீரமைக்கும் பணி எப்போது தொடங்கும்? என்று விளக்கம் அளிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

கள்ளக்குறிச்சி

புதிய மாவட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் தனியாக பிரித்து கடந்த 2019-ம் ஆண்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. இந்த மாவட்டத்துக்கு கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்காக வீரசோழபுரத்தில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 45 ஏக்கர் நிலத்தை அரசு நீண்ட கால குத்தகைக்கு எடுத்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, மாத வாடகை ரூ.1.60 லட்சம் என்று நிர்ணயித்து, இந்த வாடகையை கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை முதல் கணக்கிட்டு கோவில் நிர்வாகத்திடம் வழங்க வேண்டும். கோவிலை சீரமைக்க வேண்டும் என்று கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது.

வாடகை

இந்த உத்தரவை அமல்படுத்த கோரியும், கோவில் சீரமைப்பு பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில், தெய்வீகன் என்பவர் வழக்கு தொடந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி 'இந்த கோவில் நிர்வாகத்துக்கு செலுத்த வேண்டிய வாடகை பாக்கியாக ரூ.74 லட்சத்து 16 ஆயிரம் டெபாசிட் செய்யப்பட்டு விட்டது' எனறு கூறினார்.

ரூ.2 கோடி

இதையடுத்து நீதிபதிகள், கோவிலை சீரமைக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு, ரூ.2 கோடி செலவில் சீரமைப்பு பணிகள் விரைவில் தொடங்கபட உள்ளது'' என்று அட்வகேட் ஜெனரல் கூறினார். இதையடுத்து நீதிபதிகள் இந்த பணிகள் எப்போது தொடங்கப்படும், என்பது குறித்து விளக்கம் அளி்க்க உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்துள்ளனர்.


Next Story