கோவில் கருவறைக்குள் சென்று பதுங்கிய வாலிபருக்கு தர்ம- அடி
திருப்பூரில் திருவிளக்கு பூஜையின்போது கஞ்சா போதையில் கோவில் கருவறைக்குள் சென்று பதுங்கிய வாலிபருக்கு பக்தர்கள் மற்றும் பூசாரி தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவில் கருவறைக்குள் புகுந்த வாலிபர்
திருப்பூர்-மங்கலம் சாலை பூச்சக்காட்டில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்த பூஜை முடியும் போது 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் திடீரென்று கோவில் கருவறையினுள் சென்று ஒளிந்து கொண்டார். இதனைப் பார்த்து சாமி தரிசனம் செய்ய வந்த பெண்கள் அதிர்ச்சியடைந்தனர்.
உடனே கோவில் பூசாரி மற்றும் பக்தர்கள் கருவறைக்குள் சென்று அங்கு மறைந்து இருந்த வாலிபரை பிடித்து வெளியே இழுத்து வந்து தர்ம-அடி கொடுத்தனர். இதனால் வலி தாங்க முடியாமல் அந்த வாலிபர் அலறி துடித்தார். அப்ேபாது தன்னை ஒருவர் அரிவாளால் வெட்ட வந்ததால் உயிருக்கு பயந்து கோவிலுக்குள் வந்து ஒளிந்து ெகாண்டதாக கூறினார்.
கஞ்சா போதை
இதனைத் தொடர்ந்து திருப்பூர் மத்திய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் ேகாவிலுக்கு வந்து விசாரணை நடத்தினர். போலீசாரிடம் அந்த வாலிபரை பொதுமக்கள் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் அந்த வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில், அவர் திருப்பூர்-மங்கலம் சாலை பாலக்காடு 3-வது வீதி பகுதியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரின் மகன் கோகுல் (வயது 26) என்பதும், கஞ்சா போதையில் இருந்த அவர் மீது திருட்டு மற்றும் அடிதடி உட்பட 7 வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.
பின்னர் அவரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். கஞ்சா போதையில் கோவில் கருவறையில் புகுந்த வாலிபரை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.