ஜெயலலிதாவின் உடலுக்கு எம்பார்மிங் செய்தது யார்?- முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி பதில்


ஜெயலலிதாவின் உடலுக்கு எம்பார்மிங் செய்தது யார்?- முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி பதில்
x

ஜெயலலிதாவின் உடலுக்கு எம்பார்மிங் செய்தது யார் என்பது குறித்து முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி பதில் அளித்துள்ளார்.

சென்னை

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஆறுமுகசாமி விசாரணை ஆணையம், ஜெயலலிதாவின் பாதுகாவலர்கள் , உறவினர்கள் , சசிகலாவின் உறவினர்கள், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் , அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், காவல்துறை உயரதிகாரிகள், போயஸ் கார்டனில் பணி செய்தவர்கள் என்று விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பெற்றது.

இதனைத்தொடர்ந்து 608 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்யப்பட்டது. ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் வழக்கறிஞர் தமிழ்மணி, ஜெயலலிதாவின் மரணம் குறித்து தெளிவுப்படுத்த வேண்டும் என்று கேள்வி எழுப்பியதற்கு, முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தெரிவித்ததாவது, "நான் அறிக்கை கொடுத்து நான்கு மாதங்களுக்கு மேலாகிறது. முன்னாள் முதல்-அமைச்சர் மற்றும் ஒரு கட்சியின் தலைவரின் மரணம் என்பதால், இது போன்ற கேள்விகள் எழுகிறது. எனது அறிக்கையில் என்னால் முடிந்தது என்னவோ, கிட்டத்தட்ட எந்த சந்தேகமும் இல்லாமல் வழங்கியதால்தான் எந்தவித சர்ச்சையும் எழவில்லை.

இந்த அறிக்கை குறித்து எந்தெந்த, என்னென்ன சந்தேகம் எழுந்ததோ, அதற்கு ஏற்கனவே பதில் அளித்துவிட்டேன். ஜெயலலிதா மரணம் தொடர்பாக அந்த அறிக்கையில் நான் நிறைய எழுதியுள்ளேன். என்னுடைய அறிக்கையில் மருத்துவர்கள் சாட்சியம் அளித்ததை வைத்துதான் சொன்னேன். இன்னும் சொல்ல போனால் நான் எதையுமே அதிகமாக எழுதவில்லை. காரணம் இது மருத்துவம் சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. நான் எனது கருத்து என எதையும் சொல்லவில்லை. நீங்கள் கூறியதில் திருத்தம் உள்ளது.

அதாவது ஜெயலலிதாவை சிபிஆர் செய்தது மருத்துவரோ நர்சோ இல்லை, அறுவை சிகிச்சை அறையில் பணியாற்றும் நபர்கள்தான். எம்பார்மிங் செய்ய கடிதம் கொடுத்தது இன்னொருவர். அவர் யார் என நான் சொல்ல முடியாது. எய்ம்ஸ் மருத்துவ ஆணையத்தை தவிர வேறு யாருக்குமே தனியாக கருத்து சொல்ல முடியாது என்று ஆறுமுகசாமி பதில் அளித்தார்.


Next Story