வயநாடு தொகுதியில் ராகுல்காந்தியை எதிர்த்து கேரள பா.ஜ.க தலைவர் போட்டி
111 பேர் கொண்ட பா.ஜனதாவின் 5-வது வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் நடிகை கங்கனா ரணாவத், மேனகா காந்தி உள்ளிட்டோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
திருவனந்தபுரம்,
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. மத்தியில் ஆளும் பா.ஜனதாவை பொறுத்தவரை தேர்தல் அறிவிப்பதற்கு முன்னரே முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதைத்தொடர்ந்து அடுத்தடுத்து பட்டியல்களை வெளியிட்டு வருகிறது.அந்த வரிசையில் பா.ஜனதாவின் 5-வது வேட்பாளர் பட்டியல் நேற்று மாலையில் வெளியானது. இதில் 111 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு இருந்தனர்.
குறிப்பாக உத்தரபிரதேசம், பீகார், ஒடிசா, ராஜஸ்தான், மராட்டியம், கேரளா, கர்நாடகா போன்ற பல்வேறு மாநிலங்களுக்கான வேட்பாளர்கள் அதில் இடம்பெற்றிருந்தனர்.இதில் முக்கியமாக இமாசல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் நடிகை கங்கனா ரணாவத் களமிறக்கப்பட்டு உள்ளார். தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்துள்ள கங்கனா ரணாவத், மத்திய பா.ஜனதா அரசுக்கு ஆதரவாக தொடர்ந்து கருத்துகளை கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
இதைப்போல முன்னாள் மத்திய மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவருமான மேனகா காந்திக்கு உத்தரபிரதேசத்தின் சுல்தான்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் அவரது மகனும், தற்போதைய பிலிபிட் தொகுதி எம்.பி.யுமான வருண் காந்திக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது. அந்த தொகுதியில் மாநில மந்திரி ஜிதின் பிரசாதா களமிறக்கப்பட்டு இருக்கிறார்.கேரளாவில் ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியில், அவரை எதிர்த்து மாநில பா.ஜனதா தலைவர் கே.சுரேந்திரன் நிறுத்தப்பட்டு உள்ளார்.