பெண்களிடத்தில் யார் அத்துமீறினாலும் கண்டனத்துக்குரியது

பெண்களிடத்தில் யார் அத்துமீறினாலும் கண்டனத்துக்குரியது என்று கோவையில் முத்தரசன் தெரிவித்து உள்ளார்.
கோவை
பெண்களிடத்தில் யார் அத்துமீறினாலும் கண்டனத்துக்குரியது என்று கோவையில் முத்தரசன் தெரிவித்து உள்ளார்.
பாதுகாப்பு இல்லை
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
விலைவாசி உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதை குறைக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. தி.மு.க. தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. இன்னும் நிறைவேற்ற வேண்டியதும் உள்ளது.
பெண்களிடத்தில் யார் அத்துமீறினாலும் கண்டனத்துக்குரியது. தி.மு.க. பொதுக்கூட்டத்தில் நடைபெற்ற சம்பவம் குறித்து வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கண்டனம் தெரிவித்து உள்ளார். அதே நேரத்தில் காயத்ரி ரகுராம் பா.ஜனதாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று தெரிவித்ததுடன், பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி உள்ளார். இதுகுறித்து வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் உள்ளார்.
கருப்பு பணம் எங்கே?
கடந்த 2016-ம் ஆண்டு ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். இதன் மூலம் கருப்பு பணம் மீட்கப்படும் என்று அவர் தெரிவித்தார். ஆனால் ரிசர்வ் வங்கி 98 சதவீத பணம் திரும்பி வந்து விட்டது என்று அறிவித்து உள்ளது. அப்படியென்றால் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் நோக்கம் நிறைவேறியதா? என்றால் இல்லை. கருப்பு பணம் ஒரு ரூபாய் கூட பிடிபடவில்லை.
கோடி கோடியாய் கருப்பு பணம் வைத்திருந்தவர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. அதே நேரத்தில் சாதாரண ஏழை மக்கள், சிறு, குறு தொழில் செய்யக்கூடிய வணிகர்கள்தான் பெரும் அளவிற்கு பாதிப்பிற்கு உள்ளானார்கள். தற்போது தீர்ப்பளித்த நீதிபதிகள் மத்திய அரசிற்கு அதிகாரம் இருக்கிறதா?, இல்லையா? என்று சொல்லி இருக்கிறார்கள். அதுவா பிரச்சினை. ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததால் ஏற்பட்ட பலன் என்ன?, நோக்கம் நிறைவேறியதா? என்றால் எள் முனையளவு கூட நோக்கம் நிறைவேறவில்லை.
6-ந் தேதி ஆர்ப்பாட்டம்
கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூரை சேர்ந்த பெண் ஒருவர் கோவை யோகா முகாமில் பங்கேற்க வந்துள்ளார். ஆனால் அவர் வீடு திரும்பவில்லை. சில நாட்களுக்கு பிறகு அவர் பிணமாக மீட்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து உரிய விசாரணை நடத்த கோரி வருகிற 6-ந் தேதி கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாநில துணை செயலாளர் பெரியசாமி, பொருளாளர் ஆறுமுகம், மாவட்ட செயலாளர் சிவசாமி, துணை செயலாளர்கள் ஜேம்ஸ், குணசேகர் ஆகியோர் உடனிருந்தனர்.






