மகளிர் பஸ் பக்கவாட்டில் பெயிண்ட் அடிக்காதது ஏன்?போக்குவரத்து துறை அமைச்சர் விளக்கம்
மகளிர் பஸ் பக்கவாட்டில் பெயிண்ட் அடிக்காதது ஏன்?என போக்குவரத்து துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பெரம்பலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மகளிர் இலவசமாக பயணம் செய்யக்கூடிய பஸ்களை அடையாளம் காண முன்புறமும், பின்புறமும் இளஞ்சிவப்பு நிற பெயிண்ட் அடிக்கப்பட்டது. பஸ்சின் பக்கவாட்டில் பெயிண்ட் அடிக்காததால் எல்லோரும் கிண்டல் செய்தார்கள். பஸ் முழுவதும் பெயிண்ட் அடிப்பதில் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. பஸ்சின் பக்கவாட்டில் விளம்பரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. அதனால் தான் பெயிண்ட் அடிக்கவில்லை.
வழக்கமாக பஸ்சின் பின்பக்கம் மட்டும் தான் விளம்பரம் செய்யப்பட்டு வந்தது. பக்கவாட்டில் விளம்பரம் இல்லாமல் இருந்தது. போக்குவரத்து துறை மிகுந்த கடனில் உள்ளது. எனவே கூடுதல் வருவாயை பெருக்குவதற்காக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் விளம்பரம் மூலம் வருவாயை பெருக்க முடிவு செய்யப்பட்டது. எனவே தான் பக்கவாட்டில் பெயிண்ட் அடிக்கவில்லை. விழா காலங்களில் குறிப்பிட்ட ஊருக்கு குறிப்பிட்ட நேரத்தில் சென்றடைவதற்காகவே எல்லா ஊர்களிலும் அரசு பஸ்கள் நிறுத்தி செல்வது என்பது சிரமமானது. விரைவில் அந்த குறையையும் சரி செய்ய ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.