மத்திய கல்வி நிறுவனங்களில் தமிழ் பயிற்று மொழியாவதை எதிர்ப்பது ஏன்? - தமிழக பா.ஜ.க. கண்டனம்


மத்திய கல்வி நிறுவனங்களில் தமிழ் பயிற்று மொழியாவதை எதிர்ப்பது ஏன்? - தமிழக பா.ஜ.க. கண்டனம்
x

கோப்புப்படம்

மத்திய கல்வி நிறுவனங்களில் தமிழ் பயிற்று மொழியாவதை எதிர்ப்பதற்கு தமிழக பா.ஜ.க. கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழக பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் திருப்பதி நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி ஆய்வுக்குழு தனது அறிக்கை மற்றும் பரிந்துரைகளை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் வழங்கியுள்ளது. இந்த குழுவின் பரிந்துரைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வன்மையாக கண்டித்துள்ளார். ஏடுகள் சுட்டி காட்டுவதை கொண்டு முதல்-அமைச்சர் அறிக்கையாக வெளியிட்டுள்ளது பொறுப்பற்ற செயல் மட்டுமல்ல, வன்மையாக கண்டிக்கத்தக்கது.

ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எய்ம்ஸ் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் கட்டாயமாக இந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்றும், ஆங்கிலம் உள்ள இடங்களில் இந்தியை இடம்பெறச்செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறுவது தவறு. மேற்கண்ட கல்வி நிலையங்களில் இந்தி பேசும் மாநிலங்களில் இந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்றும், இந்தி பேசாத மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகள் இடம் பெறவேண்டும் என்றே சொல்லப்பட்டுள்ளது.

அதாவது, இனி தமிழகத்தில் உள்ள மத்திய கல்வி நிறுவனங்களில் தமிழே பயிற்று மொழியாக இடம் பெறவேண்டும் என்றே பரிந்துரை கூறுகிறது. தமிழ் பயிற்று மொழியாக வருவதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பது ஏன்?

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story