தமிழகத்தில் வாக்கு சதவீதத்தை இறுதி செய்வதில் தாமதம் ஏன்? தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்


தமிழகத்தில் வாக்கு சதவீதத்தை இறுதி செய்வதில் தாமதம் ஏன்? தலைமை தேர்தல் அதிகாரி  விளக்கம்
x

தூத்துக்குடியில் நள்ளிரவு 12 மணி வரை தரவு கொடுக்க முடியாததால், அங்கிருந்து காலையில்தான் தரவுகள் கிடைத்தன என்று தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் வாக்கு சதவீதத்தை இறுதி செய்வதில் தாமதம் ஏன்? என்பது குறித்து தந்தி டி.வி. ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சத்யபிரத சாகு அளித்த விளக்கம் வருமாறு:-

"ஒரு சில பகுதிகளில் இரவு 7 மணிக்குள் வாக்குப்பதிவு முடிவடைந்தது. ஒரு சில இடங்களில் முடியவில்லை. அப்போதைய நிலவரப்படி கிடைத்த உத்தேச தகவல்களை முதலில் வெளியிட்டோம். அதன்படி 72.09 சதவீத வாக்குகள் என்று தெரிவித்தோம்.

தூத்துக்குடியில் நள்ளிரவு 12 மணி வரை தரவு கொடுக்க முடியாததால், அங்கிருந்து காலையில்தான் தரவுகள் கிடைத்தன. பின்னர் காலையில் கிடைத்த தரவுகளின்படி 69.46 சதவீத வாக்குகள் என்று தெரிவித்தோம்.

ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் பதிவான வாக்குகள் இப்போது கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. வாக்குச்சாவடி வாரியாக வாக்குப் பதிவு விவரங்களை பதிவேற்றம் செய்ய நேரமாகும். எனவே, தற்போது வெளியிடப்பட்டுள்ள வாக்குப்பதிவு சதவீதத்தில் (69.46 சதவீத வாக்குகள்) இருந்து இறுதி வாக்குப் பதிவு என்பது சிறிய அளவில் மாறுபட்டு இருக்கலாம். அதேசமயம் இப்போதைய வாக்குப்பதிவு சதவீதத்தில் பெரிய அளவுக்கு மாற்றங்கள் இருக்க வாய்ப்பில்லை. மறு தேர்தல் எங்கும் நடத்த தேவையில்லை என்று தேர்தல் நடத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்" இவ்வாறு அவர் கூறினார்.


Next Story