மழையால் மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கும் நேரத்தில் முதல்-அமைச்சரின் மகனுக்கு மகுடம் சூட்ட அவசரம் ஏன்?- ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. கேள்வி


மழையால் மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கும் நேரத்தில் முதல்-அமைச்சரின் மகனுக்கு மகுடம் சூட்ட அவசரம் ஏன்?- ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. கேள்வி
x

மழையால் மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கும் நேரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மகனுக்கு மகுடம் சூட்ட அவசரம் ஏன் என்று ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார்.

மதுரை


மழையால் மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கும் நேரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மகனுக்கு மகுடம் சூட்ட அவசரம் ஏன் என்று ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார்.

ஆர்ப்பாட்டம்

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் தி.மு.க. அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக அமைப்புச் செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பங்கேற்று பேசியதாவது:-

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் பால் விலை, மின்சார கட்டணம் 53 சதவீதமும், வீட்டு வரி 100 சதவீதம் ஏற்றி விட்டார்கள். இந்த நிலையில் முதல்-அமைச்சர் ஸ்டாலின், மகன் உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுக்கிறார்கள். மேலும் அவர் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் பதவி பெற போகிறார். இதனால் மக்களுக்கு என்ன பயன் கிடைக்கும்.

மழை வெள்ளத்தால் மக்கள் பாதிப்பு அடைந்து கொண்டிருக்கும்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தன் மகனுக்கு மகுடம் சூட்ட அவசரம் ஏன். உதயநிதி முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த மினி கிளினிக்கை கொண்டு வருவாரா, இல்லை பெண்களுக்கான மிக்சி, கிரைண்டர் கொடுக்கப்போகிறாரா. செங்கலை தூக்கி காட்டிய உதயநிதி எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வருவரா. இந்த கூட்டத்தில் வெயில் என்று பார்க்காமல் பொதுமக்கள் திரண்டு நிற்கிறார்கள் என்றால் தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்புவதற்கு தான்.

நாடாளுமன்ற தேர்தல்

பா.ஜ.க. தொடர்பில் இருக்கும் ஓ.பன்னீர் செல்வம் மணிப்பூர், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் கவர்னர் பதவியை வாங்கிக் கொண்டு போய்விட்டால் அண்ணா தி.மு.க. தொல்லை நீங்கும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மேலூர் எம்.எல்.ஏ. பெரியபுள்ளான், மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ் சத்யன் பகுதி செயலாளர்கள் பன்னீர்செல்வம், முருகேசன், சரவணன், மாநில நிர்வாகி பூமிபாலன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story