அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் எதற்காக நீக்கப்பட்டார்? ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி தரப்பு விளக்கம்
அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் எதற்காக நீக்கப்பட்டார்? என்பதற்கு விளக்கம் அளித்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஐகோர்ட்டில் நேற்று வாதிடப்பட்டது.
சென்னை.
அ.தி.மு.க., பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்தும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் முன்பு 2-வது நாளாக நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வக்கீல் விஜய் நாராயண் ஆஜராகி வாதிட்டார். வாதத்தில் அவர் கூறியதாவது:-
1972-ம் ஆண்டு அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கிய நாள் முதல் 2017-ம் ஆண்டு வரை கட்சியை பொதுச்செயலாளர் தான் நிர்வகித்து வந்துள்ளனர். இடையில் 4 ஆண்டுகள் மட்டுமே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இரட்டை தலைமையின் கீழ் செயல்பட்டது.
ஒற்றை தலைமை
கட்சியின் அடிப்படை விதிகளில் திருத்தம் செய்து கடந்த ஆண்டு ஜூலை 11-ந் தேதி நடந்த அ.தி.மு.க., பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அன்றைய தினமே தேர்தல் ஆணையத்துக்கும் அனுப்பிவைக்கப்பட்டது. அந்த திருத்தங்களை 10 மாதங்கள் கழித்தே தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.
கட்சியின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு மீண்டும் ஒற்றை தலைமை வேண்டும் என கடந்த ஆண்டு ஜூன் 14-ந் தேதி நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டதன் அடிப்படையிலேயே, மீண்டும் பொதுச்செயலாளர் பதவி கொண்டுவரப்பட்டது. இதன் தொடர்ச்சியாக எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக பதவி வகித்து வருகிறார்.
ஏன் நீக்கம்?
பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட கட்சியில் உறுப்பினராக இருந்தாலே போதும் என்ற நிலை முன்பு இருந்தது. ஆனால் தற்போது கட்சியின் அடிமட்ட அளவில் செல்வாக்கு பெற்றவர்கள் மட்டுமே பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட முடியும் என்ற வகையில் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
தி.மு.க. தலைவர்களை சந்தித்ததாக கூறப்பட்டதாலேயே ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்க சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதுவும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்து தீர்மானம் நிறைவேற்றிய பிறகே ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களும் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் தான் நிறைவேற்றப்பட்டது.
சபாநாயகருக்கு தகவல்
இந்த தீர்மானங்கள் குறித்து சபாநாயகருக்கு தகவல் அனுப்பியும், இதுவரை அதை அவர் அமல்படுத்தவில்லை. அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அத்துமீறி நுழைந்ததை ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்துள்ளது.
இவ்வாறு அவர் வாதிட்டார். எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதங்கள் நிறைவடையாததால், வழக்கு விசாரணை வருகிற 12-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.