சீமான் மீதான வழக்கை இத்தனை ஆண்டுகள் நிலுவையில் வைத்தது ஏன்? போலீஸ் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு


சீமான் மீதான வழக்கை இத்தனை ஆண்டுகள் நிலுவையில் வைத்தது ஏன்? போலீஸ் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
x

சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரை 2012-ம் ஆண்டே திரும்ப பெற்ற நிலையில், அதுதொடர்பான வழக்கை இத்தனை ஆண்டுகள் நிலுவையில் வைத்திருந்தது ஏன்? என்பதற்கு விரிவான பதில் அளிக்கும்படி போலீஸ் தரப்புக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்துக்கொள்வதாக கூறி, ஏமாற்றி விட்டதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011-ம் ஆண்டு புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில், சீமான் மீது கொலை மிரட்டல், மோசடி, கற்பழிப்பு உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர், போலீசார் நடத்திய விசாரணையின்போது, அவசரப்பட்டு, பிறர் பேச்சை கேட்டு புகார் கொடுத்துவிட்டேன். இந்த புகாரை திரும்ப பெறுவதாக விஜயலட்சுமி எழுதிக்கொடுத்தார்.

இந்தநிலையில், சீமான் மீது நடிகை விஜயலட்சுமி மீண்டும் போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்காக வளசரவாக்கம் போலீசில் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜரானார்,

அவகாசம் வேண்டும்

இந்தநிலையில், தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் சீமான் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் ஆ.தாமோதரன், "சீமான் மனு தனக்கு இதுவரை வழங்கவில்லை. அதனால், போலீஸ் தரப்பின் கருத்தை கேட்டு தெரிவிக்க அவகாசம் வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்தார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஜான் சத்தியன், வக்கீல் எஸ்.சங்கர் ஆகியோர், "2011-ம் ஆண்டு விஜயலட்சுமி கொடுத்த புகாரை, 2012-ம் ஆண்டு ஆகஸ்டு 9-ந் தேதி அவரே வாபஸ் பெற்றுவிட்டார். அந்த புகாரின் அடிப்படையில் பதிவான வழக்கை இதுவரை போலீசார் முடித்து வைக்கவில்லை. தற்போது அதே குற்றச்சாட்டுடன் கொடுத்த மற்றொரு புகாரையும் கடந்த 15-ந் தேதி விஜயலட்சுமி வாபஸ் பெற்றுவிட்டார்'' என்று வாதிட்டனர்.

விரிவான பதில்

இதையடுத்து நீதிபதி, "போலீஸ் தரப்புக்கு மனுவை மனுதாரர் தரப்பு வழங்க வேண்டும். சீமான் மீது 2011, 2023-ம் ஆண்டுகளில் கொடுத்த புகார்கள் மற்றும் அந்த புகாரை வாபஸ் பெறப்பட்ட விவரங்களை போலீசார் தாக்கல் செய்யவேண்டும்.

குறிப்பாக 2011-ம் ஆண்டு கொடுக்கப்பட்ட புகார் வாபஸ் பெறப்பட்ட நிலையில், வழக்கு இத்தனை ஆண்டுகளாக ஏன் நிலுவையில் வைக்கப்பட்டது? என்பதற்கும் விரிவான பதிலை அளிக்க வேண்டும். விசாரணையை வருகிற 26-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன்'' என்று உத்தரவிட்டார்.


Next Story