பரவலாக மழை; விவசாயிகள் மகிழ்ச்சி
திருவாரூர் மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
திருவாரூர்;
திருவாரூர் மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
பருவமழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ள நிலையில் கடலோர பகுதிகளில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் தமிழகத்தின் ஒரு சில பகுதிகள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் வருகிற 22-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதன்படி தமிழக கடலோர மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு
நேற்று திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக திருவாரூரில் காலை முதல் விட்டு, விட்டு மழை பெய்தது. இந்த மழையினால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஒடியது. பெரும்பாலான சாலைகள் பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சியளித்தது.குறிப்பாக விரிவாக்கப்பட்ட நகர் பகுதி, கிராமப்புற சாலைகள் சேறும், சகதியுமாக காட்சியளித்தது. சாலையோர வியாபாரிகள், கட்டுமான தொழிலாளர்கள் சற்று பாதிக்கப்பட்டனர். திருவாரூரில் நேற்று மின்தடை அறிவிக்கப்பட்ட நிலையில் மழை பெய்ததால் வியாபாரிகள், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் இந்த மழை சாகுபடிக்கு உதவியாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
நீடாமங்கலம்
நீடாமங்கலம் பகுதியில் கடந்த 2 நாட்களாக லேசான மழை பெய்து வருகிறது. நேற்றும் குளிர்ந்த காற்றும் வீசி மழை பெய்தது.குறுவை அறுவடைக்கு தயாராகவுள்ள நிலங்களில் தண்ணீர் தேங்காத வண்ணம் நீர் மேலாண்மையை கடைபிடிக்குமாறு விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் வடிகால் வசதியை பராமரிக்க வேண்டும் என்றும் வேளாண்மைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கூத்தாநல்லூர்
கூத்தாநல்லூர் பகுதியில் நேற்று முன் தினம் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில், நேற்று காலை முதலே வானம் அவ்வப்போது மேகமூட்டம் சூழ்ந்து காணப்பட்டது. பின்னர் லேசான தூறலாக பல இடங்களில் பெய்த மழை படிப்படியாக அதிகரித்து பரவலாக மழை பெய்தது. மேலும், வடபாதிமங்கலம், பழையனூர், பாண்டுகுடி, நாகங்குடி, வேளுக்குடி, மரக்கடை, வக்ராநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சில இடங்களில் லேசான மழை பெய்தது. இதனால், சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் தேங்கியது.