நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை


நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை
x

நெல்லை மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பரவலாக மழை

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. தினமும் 100 டிகிரியை தாண்டி வெயில் அடித்தது. இதனால் மக்கள் சாலையில் நடமாட முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் இருந்தது.

இந்த நிலையில் நேற்று காலையில் இருந்து மாலை வரை வெயில் அதிக அளவில் இருந்தது. மாலை 4 மணிக்கு திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. 4.30 மணி அளவில் நெல்லை மாநகர பகுதியான சந்திப்பு, பாளையங்கோட்டை, மேலப்பாளையம், டவுன் பகுதியில் சாரல் மழை பெய்ய தொடங்கியது.

குளம்போல் தேங்கியது

இந்த மழை சில இடங்களில் பரவலாக பெய்தது. மேலும் பாளையங்கோட்டை பகுதியில் சிறிது நேரம் மழைபெய்தது. இதனால் மழைநீர் ஆங்காங்கே சாலைகளில் தேங்கி நின்றன. இதேபோல் சுத்தமல்லி, கொண்டாநகரம், கல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலையில் பலத்த மழை பெய்தது. இதனால் மழைநீர் ஆங்காங்கே குளம் போல் தேங்கி நின்றது.

மூலைக்கரைப்பட்டியில் நேற்று மாலை சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக பரவலாக மழை பெய்தது. இட்டமொழியிலும் மழை பெய்தது.

பொதுமக்கள் மகிழ்ச்சி

சேரன்மாதேவி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான மேலச்செவல், பத்தமடை, வீரவநல்லூர் மற்றும் முக்கூடல் ஆகிய பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் வரை பரவலாக மழை பெய்தது. இதேபோல் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Related Tags :
Next Story