மாவட்டத்தில் பரவலாக மழை
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
எஸ்.புதூர்,
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடும் வெயில்
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்தது. அக்னி நட்சத்திரம் போல கொளுத்திய வெயிலால் வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகினர். எஸ்.புதூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான செட்டிகுறிச்சி, புழுதிபட்டி, குன்னத்தூர், தர்மபட்டி, கே.புதுப்பட்டி, கிழவயல், கரிசல்பட்டி, நாகமங்கலம், மேலவண்ணாரிருப்பு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் காணப்பட்டது. வெப்பத்தின் தாக்கத்தால் பகலில் வெளியே செல்வதை தவிர்த்தனர்.
இந்நிலையில் நேற்று பகலில் எஸ்.புதூர் பகுதிகளில் வழக்கம் போல வெயில் வாட்டி வதைத்தது. பின்னர் இரவு திடீரென இடி, மின்னலுடன் கூடிய பரவலான மழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் இந்த மழை நீடித்தது. இந்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது.
திடீர் மழை
அதேபோல் காரைக்குடியிலும் இரவில் கனமழை பெய்தது. மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று இரவு கன மழையும், சில பகுதிகளில் லேசான சாரல் மழையும் பரவலாக பெய்தது. கடந்த சில நாட்களாக இரவில் வெப்பத்தின் தாக்கம் இருந்த நிலையில் திடீரென நேற்று இரவு பெய்த இந்த மழையால் இரவில் குளிர்ந்த காற்று வீசியது. இதன் காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.