தேனி மாவட்டத்தில் பரவலாக மழை:வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 53 அடியாக உயர்ந்தது.
வைகை அணை
ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. இந்த அணை மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் குடிநீர் மற்றும் பாசன வசதி பெறுகின்றன. முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் வைகை அணைக்கு நீர்வரத்தாக உள்ளது.
இந்நிலையில் தேனி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக முல்லைப்பெரியாறு மற்றும் வைகை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அதிகமாக மழை பெய்கிறது. இதனால் வைகை அணைக்கான நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. இதற்கிடையே நேற்று முன்தினம் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 490 கன அடியாக இருந்தது.
நீர்வரத்து அதிகரிப்பு
இந்நிலையில் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பால் நேற்று நீர்வரத்து வினாடிக்கு 710 கன அடியாக அதிகரித்தது. இதனால் நீர்மட்டம் 53 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து மதுரை, சேடப்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், தேனி உள்ளிட்ட பகுதிகளின் குடிநீர் தேவைக்காக மட்டும் வினாடிக்கு 69 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்வதால் அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்டதால் வழக்கமாக ஜூன் மாதம் முதல் வாரத்தில் முதல்போக பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் இந்த ஆண்டு திறக்கவில்லை. இதனால் தென்மேற்கு பருவமழை பொய்த்த நிலையில், வடகிழக்கு பருவமழை கைகொடுத்து, வைகை அணையில் இருந்து 2-ம் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பில் 5 மாவட்ட விவசாயிகள் காத்திருக்கின்றனர்.