மாவட்டத்தில் பரவலாக கோடை மழை


மாவட்டத்தில் பரவலாக கோடை மழை
x

புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவலாக கோடை மழை பெய்தது. வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

புதுக்கோட்டை

கோடை மழை

புதுக்கோட்டையில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த ஓரிரு நாட்களில் அவ்வப்போது லேசாக மழை பெய்தது. இந்த நிலையில் தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவும் காரணமாக தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அந்த அடிப்படையில் புதுக்கோட்டையில் நேற்று காலை முதல் வெயில் சற்று அடித்தது. இருப்பினும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மேலும் மதியம் 2 மணிக்கு மேல் வானில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது.

இந்த மழை சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக ஒரே சீராக பெய்தது. இதனைால் சாலையோரம் மழைநீர் ஆங்காங்கே தேங்கியது. மழைநின்ற பின் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த கோடை மழையினால் வெப்ப தாக்கம் குறைந்திருந்தது. இதேபோல மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் லேசாக மழை பெய்தது. அக்னி நட்சத்திரம் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தொடங்க உள்ள நிலையில் வெயிலின் தாக்கம் எப்படி இருக்குமோ? என கலக்கமடைந்துள்ளனர்.

வடகாடு

வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரு வாரங்களாக கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து, சுட்டெரித்து வந்தது. இந்தநிலையில் இப்பகுதிகளில் நேற்று மிதமான மழைபெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Related Tags :
Next Story